புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை- ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை தாண்டியது

281 0

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் 30 ஆயிரம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச அம்சங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

ஒரு மாத இடைவெளியில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. இடையில் அவ்வப்போது சற்று விலை குறைந்து இருந்தாலும், மறுநாளிலேயே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகிறது. நேற்றும் விலை அதிகரித்து தான் இருந்தது.

நேற்று மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.27-ம், சவரனுக்கு ரூ.216-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 729-க்கும், ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்து 832-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தங்கம் விலை அதிகரித்தது போலவே வெள்ளியும் உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு 60 காசும், கிலோவுக்கு ரூ.600-ம் உயர்ந்து, ஒரு கிராம் 52 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.52 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை வர்த்தக நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.
சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.30120 என்ற நிலையில் விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து, கிராம் 3765 ரூபாய்  என்ற நிலையில் உள்ளது. சென்னையில் கடந்த 40 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 3640 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் கிராமுக்கு 2.60 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.55.20 என்ற நிலையில் உள்ளது.