ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எவருக்கு ஆதரவு வழங்கும் என்ற கேள்விக்கு ஒரே பதில் 2020 ஆம் ஆண்டு சுதந்திர கட்சியே ஆட்சியமைக்கும் என்பதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அத்துடன் பிணைமுறி மோசடியின் முக்கிய சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் இணைந்து மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் தரப்பினரும் குற்றவாளி கூண்டுக்கு செல்ல தயாராகுங்கள் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது தேசிய மாநாடு சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம் பெற்றது.
இதன்போது கருத்துரைக்கையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல் செயலொழுங்கு இன்று மிகவும் கீழ்த்தரமாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்யும் நோக்கம் எவருக்கும் கிடையாது. ஆட்சிகாலத்தில் எவ்வளவு நிதி திரட்டிக் கொள்ள வேண்டும் என்ற விடயத்தில் மாத்திரமே கவனம் செலுத்துகின்றார்கள். இந்நிலைமை முழுமையாக மாற்றிமைக்கப்படும்.
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றில் கோரியிருந்த சட்டவியாக்கியானம் தொடர்பில் நீதியரசர்கள் குழாம் சுயாதீனமான தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள். மாகாண சபை தேர்தல் தொடர்பில் நியமிக்கபப்பட்ட எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கை இல்லாமல் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் தேர்தல் உரிமை இன்று அதிகார பூர்வமாக மீறப்பட்டுள்ளது இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே முழு பொறுப்பினையும் கூற வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.