இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை வலுவாக்கிக்கொள்ள எதிர்பார்ப்பு – சாகல

263 0

இந்தியா வெளிநாடொன்றிற்கு வழங்குகின்ற அதிகபட்ச ஒத்துழைப்பினை இலங்கைக்கே வழங்குகின்றது எனத் தெரிவித்த கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, பொருளாதாரத்துறையில் இந்தியாவுடன் தொடர்ந்தும் நட்புறவைப் பேணுவதன் மூலம் வர்த்தக ஒப்பந்தங்களை வலுவாக்கிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இலங்கை- இந்தியா சங்கத்தினால் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்காவும் இலங்கை- இந்திய சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

இந்தியா வெளிநாடொன்றிற்கு வழங்குகின்ற அதிகபட்ச ஒத்துழைப்பினை இலங்கைக்கே வழங்குகின்றது. துறைமுக அபிவிருத்தி பணிகளின் பொருட்டு மாபெரும் ஒத்துழைப்பினை வழங்குகின்றது. அதன் கீழ் காங்கேசன்துறை துறைமுகத்திற்காக 45.7 டொலர்களை வழங்கியுள்ளது. மேலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி பணிகளின் பொருட்டு கூட்டுறவு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் இத்திட்டங்கள் முழுமையாக நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனூடாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன்கள் செயற்பாட்டு திறனை அதிகரிக்க முடியும். மேலும் இந்தியா மற்றும் இலங்கையிடையே படகு சேவையொன்றையும் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். அதன் பின்னர் எம்மிடையேயான வர்த்தக ஒப்பந்தங்களை வலுவாக்கிக்கொள்ள முடியும் என்றும் இதன்போது கூறினார்.