மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகளாவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
அத்துடன் மஹிந்த தரப்பினர் தேர்தல் காலத்தில் மாத்திரம் மழைக்காலத்தில் கத்துகின்ற தவளைகள் போன்று 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறுவார்கள்.
13 ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரை எவ்வித சமரசங்களுமின்றி இணைந்த வடகிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தருவதற்குச் சம்மதித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாரான எந்தவொரு தரப்பினருடனும் பேச நாங்களும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் கூறினார்.
தேசிய பிரச்சினைக்குத் தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதனைப் பொறுத்தவரை தற்போது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களே சிக்கலுக்குரியதாகக் காணப்படுகின்றன. எனவே அவை தொடர்பிலும் அரசியல் தீர்வு குறித்தும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அவர்கள் வேறு எவருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்பட்டால் நாங்கள் தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேச்சு நடத்துவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கூறியிருக்கிறார்.
இதுகுறித்து வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.