மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஒக்டோபர் 24ஆம் திகதி தொடங்கி 30 வரையான நாட்கள் தேசிய பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் மின்சாதனக் கழிவு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கழிவு ஒழிப்பு வாரத்தின் யாழ் மாவட்டத்துக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (24.10.2016) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக கழிவுகளைச் சேகரிக்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்துள்ளார்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகள் உயிர்மச் சிதைவுக்கு உட்படாமல் சூழலில் நிரந்தரமாகவே தங்கிவிடுவதால் சுற்றாடல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இவற்றை எரிக்கும்போது வெளியேறும் டையொக்சின் நச்சுவாயு அதனைச் சுவாசிப்பவர்களிடையே பல்வேறுவகையான நோய்களுக்குக் காரணமாக அமைகின்றது. பழுதடைந்த இலத்திரனியல் உபகரணங்களைக் கழிவுகளாகத் தூக்கிவீசும்போது அவற்றில் உள்ள ஈயம், கட்மியம், குறோமியம் போன்ற பாரஉலோகங்கள் நிலத்தடி நீருடன் கலந்து உடல்நலக் கேடுகளை விளைவிக்கின்றன. இவற்றைக் கருத்திற் கொண்டே, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் இக்காலப் பகுதியில் கழிவுகளைச் சேகரித்து மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் நோக்கிலுமே மத்திய சுற்றாடல் அமைச்சால் இந்நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இக்கழிவுகளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள சேமிப்பு நிலையத்திலும், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் கையளிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாணப் பணிப்பாளர் எம்.ஏ.சி.நஜீப், உதவிப் பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார், யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோருடன் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.