நாடுபூராகவும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக, பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சுமார் 3265 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்நடவடிக்கைக்காக 14,695 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று சனிக்கிழமை அதிகாலை 2மணி தொடக்கம் 6மணிக்கிடைப்பட்ட 5 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 401 பேரும், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் 882 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1080பேரும், வெவ்வேறு குற்றச்செயல்களை புரிந்தமை தொடர்பில் 767 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சட்டவிரோத மதுபானவிற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 135 பேரும் உள்ளடங்கலாக 3265 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, 4667 சந்தேக நபர்களில் மீது போக்குவரத்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.