ஜனாதிபதி மைத்திரிபால இறுதித் தருணத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவார். அத்துடன் மஹிந்த தலைமையிலான பரந்துபட்ட கூட்டணியில் இணைவதே சுதந்திரக்கட்சிக்குள்ள ஒரே தெரிவாகுமென அக்கட்சியிலிருந்து வெளியேறி பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸா நாயக்க தெரிவித்தார்.
கேள்வி:- பொதுஜன பெரமுனவில் திடீரென இணைந்தமைக்கான காரணம் என்ன?
பதில்:- வரலாற்றினை எடுத்துப் பார்க்கின்றபோது, ஐ.தே.கவின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கூட்டணிகள் அமைகின்றபோது சுதந்திரக்கட்சி தலைமை வழங்கியுள்ளது. தற்போது சுதந்திரக்கட்சி பொதுஜன பெரமுனவாக உள்ளது.
ஆகவே, சர்வாதிகார ஐ.தே.வை வீட்டுக்கு அனுப்புவதற்காக அனைத்து சக்திகளையும் ஓரணியில் திரட்டி முதற்கட்டமாக கோத்தாபயவுக்கு வலுவான ஆணையுடன் நாட்டின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொடுப்பதற்காக இந்த மாற்றமாகும். கொள்கை அடிப்படையில் அது எமது கடமையுமாகும். எமது தாய்வீட்டுக்கு வந்ததைப்போன்று உணர்கின்றோம்.
கேள்வி:- உங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களது பாராளுமன்ற உறுப்புரிமை கேள்விக்குறியாகின்றதே?
பதில்:- எனது உறுப்புரிமைக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் தலைவராக உள்ளார். மேலும் எமக்கு தேசிய பட்டியல் உறுப்புரிமையை வழங்கியது மஹிந்த ராஜபக் ஷவே. ஆகவே அந்த விடயத்தில் குழப்பமடைய வேண்டியதில்லை. மேலும் எந்தவிதமான தருணங்களையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.
கேள்வி:- கோத்தாபயவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் உள்ள நிலையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்பது சாத்தியமாகுமா?
பதில்:- நாட்டின் நிலைமைகளை பார்க்கின்றபோது எதிர்கால சிந்தனையும் நிருவாகத்திறமை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனுபவங்களைக் கொண்ட வலுவான தலைமைத்துவம் அவசியமாகின்றது. கோத்தாபய, யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரான காலத்தில் அபிவிருத்திச் செயற்பாடுகளின்போதும் செயற்பாட்டு ரீதியாக தன்னை நிரூபித்துள்ளார். ஆகவே விமர்சனங்களுக்கு அப்பால் அனைத்தின மக்களும் அவரை ஆதரிப்பார்கள்.
கேள்வி:- பொதுஜன பெரமுனவில் நீங்கள் இணைந்தமை சுதந்திரக்கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையின் எதிரொலியாக கொள்ள முடியுமா?
பதில்:– பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் நான் பங்குபற்றியிருந்தேன். என்னுடன் மேலும் சில சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்தார்கள். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக் ஷ அறிவிக்கப்பட்டதும் வாழ்த்து தெரிவிக்கவே அங்கு சென்றேன். நான் அங்கு செல்லும் போது பதவியைத்துறந்து விட்டுத்தான் சென்றிருந்தேன். அதுமட்டுமன்றி நானும், டிலானும், சரத் அமுனுகமவும் எமது பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்குமாறும் கூறியிருந்தோம். அதன் பின்னர் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.
கேள்வி:- தேசிய மாநாட்டில் பங்கேற்பது குறித்த விடயத்தினை சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியிருந்தீர்களா?
பதில்:- ஆம், ஜனாதிபதி வெளிநாட்டில் இருந்தமையால் நான் அவருடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியிருந்தேன். அதன்போது, தேசிய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்றும் தான் இலங்கை வந்ததும் நேரில் சந்திப்பதாகவும் அதுவரையில் பொறுமையாக இருக்குமாறும் கூறினார். அச்சமயத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை களுக்கு எதிரான, இடதுசாரித்துவ கொள்கைகளைப் பின்பற்றுகின்ற, எம்முடன் இணைந்து பணியாற்றிய தரப்பினரின் முக்கிய நிகழ்வில் பங்கேற்பதில் தவறில்லை என்று கூறினேன்.
மேலும் சுதந்திரக்கட்சி பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. ஆகவே, நாம் ஏற்கனவே ஒன்றாக இருந்தவர்கள். எதிர்காலத்தில் ஒருமைப்படப் போகின்றவர்கள். அவ்வாறான நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்று ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுகின்போது அவரை அருகில் இருந்து வாழ்த்துவதில் தவறில்லை என்று எடுத்துரைத்தேன். அத்துடன் கலந்துரையாடல் நிறைவுக்கு வந்திருந்தது.
கேள்வி:- நீங்கள் உள்ளிட்டவர்கள் அமைச்சுப்பதவியை துறந்த காலம்முதல் பொதுஜன பெரமுனவும், சுதந்திரக்கட்சியும் இணையவேண்டும் என்று கூறினாலும் தற்போது வரையில் அது சாத்தியப்படாது செல்கின்றதே?
பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டில் சுதந்திரக்கட்சி தொடர்ந்தும் இருக்குமாயின் மக்களிடத்திலிருந்து முற்றாக அந்நியப்படுத்தப்பட்டுவிடும் ஆபத்துள்ளமையை நாம் அறிந்திருந்தோம். அதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான
சக்தியொன்றை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தோம்.
அதற்கமைய ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவந்திருந்தோம். இதற்கு ஆரம்பத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரி ஆதரவளித்தபோதும் வாக்கெடுப்பு நடைபெறும் தருணத்தில் அதில் எம்மை பங்கேற்க வேண்டாம் என்று கூறினார்.
அந்த தீர்மானத்தினை நாம் எதிர்த்தோம். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேர் பதவிகளை துறந்து அரசிலிருந்து வெளியேறினோம். வாக்கெடுப்பிலும் பங்கேற்றோம். பின்னர் கட்சியில் தொடர்ச்சியாக அங்கம் வகித்துக்கொண்டு ரணிலை வெளியேற்றி ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தினை ஸ்தாபிப்பதற்கு முயற்சிகளை எடுத்தோம். பலர் அவ்வாறு செய்ய முடியாது என்று தான் கூறினார்கள்.
இருப்பினும் மிக கடினமான அந்த பணியை முயற்சித்துப்பார்த்தோம். எனது வீட்டில் தான் மைத்திரிபாலவும், மஹிந்தவும் சந்திப்புக்களை நடத்தி கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஆட்சியை மாற்றினார்கள். இருப்பினும் அந்த அரசாங்கத்தினை தொடர்ந்தும் தக்கவைப்பதில் எம்மால் வெற்றிபெற்றிருக்க முடியவில்லை.
ஆனால் அந்த முயற்சியின் பலனாக பல நன்மைகள் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சித்தலைவர் பதவி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்துள்ளது. பொதுஜன பெரமுனவுடன் பல தரப்பட்ட அணிகள் இணைந்துள்ளன. சுதந்திரக்கட்சியுடனான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
கேள்வி:- கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றனவே தவிர செயற்பாட்டு ரீதியான கூட்டிணைவு சாத்தியப்படவில்லையல்லவா?
பதில்:- அதற்கு காரணங்கள் உள்ளன. சுதந்திரக்கட்சியில் சிலர் சஜித்துடன் தொங்குவதற்கும், சிலர் கருவுடன் தொங்குவதற்கும், இன்னும் சிலர் ரணிலுடன் தொங்குவதற்கும் சிந்திக்கின்றார்கள். இதன் காரணமாகத்தான் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை ஏற்படுத்தும் சூழல் தாமதப்பட்டுக்கொண்டு செல்கின்றது.
இந்த நிலைமைகளை முறியடித்து சுதந்திரக்கட்சியையும், பொதுஜன பெரமுனவையும் ஒன்றிணைப்பதற்கு நான் உள்ளிட்டவர்கள் பல முயற்சிகளை எடுத்திருந்தோம். இருப்பினும் தாமதப்படுத்தல்கள் ஓய்ந்தபாடில்லை. அவ்வாறான நிலைமையில் தான் நாம் தீர்க்கமான முடிவொன்றுக்கு செல்ல வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டோம். எமது முடிவின் மூலமாவது சுதந்திரக்கட்சி பொதுஜன பெரமுன வுடன் இணைவதன் முக்கியத்துவத்தினை உணர்த்துவதே எமது நோக்கமாக உள்ளது.
கேள்வி:- சுதந்திரக்கட்சியின் தனித்துவத்தினை பாதுகாத்துக் கொண்டு தான் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளவேண்டும் என்று பொதுச்
செயலாளர் கூறியுள்ளாரே?
பதில்:- தேசிய மாநாட்டில் பங்கேற்காதவர்கள் அன்றைய தினம் கோத்தாபய வழங்கிய இராப்போசன விருந்துபசாரத்திற்கு வந்திருந்தார்கள். கட்சியின் பொதுச்செயலாளர், கூட்டணியின் பொதுச்செயலாளர் என அனைவரும் வந்தார்களே. அவ்வாறு வரமுடியும் என்றால் ஏன் தேசிய மாநாட்டில் பங்கேற்க முடியாது. அரசியல் யதார்த்தத்தினை புரிந்துகொள்ளாதவர்களால் எப்படி கட்சியைப் பாதுகாக்க முடியும்.
கேள்வி:- சுதந்திரக்கட்சியில் நீண்ட காலமாக செயற்பட்டு வருவதோடு சிரேஷ்டத்துவத்தினையும் கொண்டிருக்கும் உங்களைப்போன்றவர்கள் அதிலிருந்து வெளியேறுவதால் அக்கட்சிக்கு மேலும் நெருக்கடியான நிலைமைகள் அல்லவா எழப்போகின்றன?
பதில்:- நான் ஆரம்பத்திலிருந்து சுதந்திரக்கட்சியைச் சார்ந்தவன். சந்திரிகாவின் தீர்மானங்களால் அன்று கட்சியை விட்டு வெளியேறியிருந்தாலும் சொற்பகாலத்தில் மீண்டும் எனது கட்சிக்கே திரும்பி விட்டேன். தற்போது மிகுந்த கவலையுடன் அக்கட்சியிலிருந்து வெளியேறுகின்றேன். ஆனால் சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மை தற்போது பொதுஜன பெரமுனவில் தான் இருக்கின்றது. பெயர் வேறுபட்டாலும் உண்மையான சுதந்திரக்கட்சியில் தான் நான் இணைந்துள்ளேன். சுதந்திரக்கட்சியினர் நிபந்தனைகளை கைவிட்டு பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டும். அதுவே அவர்களுக்குள்ள ஒரே தெரிவாகும்.
கேள்வி:- ஐ.தே.கவிலிருந்து சஜித் வெளியேறினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடன் இணைவார் என்று கூறப்படுகின்ற நிலையில் மஹிந்த அணியுடன் இணைவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இன்னமும் உள்ளதா?
பதில்:- அவையெல்லாம் அனுமானங்களே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதியில் கோத்தாபயவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதோடு பொதுஜன பெரமுனவுடன் இணைந்து மஹிந்த ராஜபக் ஷவுடன் பரந்துபட்ட கூட்டணியை ஏற்படுத்துவார்.
நேர்காணல்:- ஆர்.ராம்