ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய இலங்கை படகு: வந்தவர்கள் கடத்தல்காரர்களா? தீவிரவாதிகளா..?

284 0

இந்தியாவில், உ கடல் பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகை மீட்ட கடலோர பாதுகாப்பு பொலிஸார், அதில் வந்தவர்கள் யார் என்பது குறித்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள தீவுகளில் அடிக்கடி மர்மப் படகுகள் கரை ஒதுங்குவதும், அதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்துவதும் வழமையாகிவிட்டது.

இந்நிலையில் நேற்று (30.08.2019), மண்டபம் அருகே உள்ள மனோலிபுட்டி தீவு வழியாக நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், தீவுப் பகுதியில் ஃபைபர் படகு ஒன்று கரை ஒதுங்கி இருப்பதைக் கண்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள், கடலோர பாதுகாப்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தையடுத்து, மண்டபம் கடலோர பாதுகாப்பு பொலிஸ் அதிகார் கனகராஜ், உப பொலிஸ் அதிகாரி ராஜ்குமார், கருப்பசாமி உள்ளிட்ட சில பொலிஸார் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து ஒரு மீன்பிடி படகு மூலம் மனோலிபுட்டி தீவுக்கு சென்றனர்.

அங்கு, தீவை ஒட்டிய கடல் பகுதியில் நின்ற படகில் இறங்கி சோதனையிட்டபோது, அந்த படகில் இன்ஜினோ, வலை மற்றும் தூண்டில் உள்ளிட்ட எந்தவொரு மீன்பிடி பொருட்களும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் படகை, மீன்பிடி படகு மூலம் கயிறு கட்டி மண்டபம் பகுதிக்கு இழுத்து வந்து, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கடலோர காவல்படை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மனோலிபுட்டி தீவு பகுதியில் மீட்கப்பட்ட படகு 16 அடி நீளமும், 7 அடி அகலமும் கொண்டது. அந்தப் படகில் ஒ.எப்.ஆர்.பி.ஏ.4624 என்ற பதிவு எண் எழுதப்பட்டுள்ளதுடன், சின்னக்குடியிருப்பு கல்பட்டி எனவும் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், இப்படகு இலங்கை கல்பட்டி அல்லது நீர்க்கொழும்பு பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம். படகில் வந்தவர்கள் கடத்தல்காரர்களா? அல்லது தீவிரவாதிகளா..?, படகின் இன்ஜினை மண்ணுக்குள் புதைத்து வைத்துவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனரா..? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, இலங்கையில் இருந்து கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இலங்கையை சேர்ந்தச் படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பது ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.