காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடே : சிவசக்தி ஆனந்தன்

281 0

அரசாங்கம் சர்வதேச சமூகத்தை  ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படுகின்ற இந்த சட்டமூலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் வவுனியா ஓமந்தையில் நேற்று இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போன உறவுகள் தங்களுக்கு ஒரு நீதி வேண்டி ஒரு போராட்டத்தை  நடத்தியிருக்கிறார்கள்.

அந்தவகையில் ஓமந்தையிலே  இறுதிக்கட்ட போரிலே இதே இடத்திலே வைத்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்களை வந்து அதாவது சரணடைய சொல்லியும் சரணடைந்தவர்களையும் பேருந்துகளிலும் ஏற்றிக்கொண்டு சென்றவர்கள் இன்றைக்கு 10 வருடங்களைக் கடந்தும் அவர்களுக்கு என்ன நடைபெற்றது என தெரியாது.

விஷேசமாக இந்த தாய் , தகப்பனோடு  சேர்ந்து சிறார்களும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு வயதிலிருந்து ஐந்து வயது குழந்தைகள் வரை பல நூற்றுக்கணக்கான சிறுவர்களும் இந்த பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

சிறார்களுக்கு கூட இன்றைக்கு 10 வருட காலமாக என்ன நடைபெற்றது என தெரியாது. ஆகவே தற்போது இருக்கக்கூடிய இந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே இந்த காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறவர்கள் தொடர்பான ஒரு உருப்படியான தீர்வு இதுவரையும் காணப்படவில்லை. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் என்ற பெயராலே வெறும் கண்துடைப்புக்காக ஒரு அலுவலகமாக இதனை அமைத்திருக்கிறார்கள்.

இவ் அலுவலகத்தின் ஊடாக எந்தவித நீதியையும் பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கான நஷ்ட ஈட்டை கூட பெற்றுக் கொள்ளமுடியாது. வெறுமனே ஒரு சான்றிதழை மட்டும் பெறுவதற்குரிய இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகம் இன்று கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இது ஒரு காலம் கடத்துகின்ற ஒரு விடயம். சர்வதேச சமூகத்தையும் ஏனையோர்களையும் இதில் காலம் கடத்துகின்ற விடயமாகவே இந்த அரசாங்கம் செய்கின்றது.

உண்மையிலேயே ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் என்னவென்று கூறினால் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குரிய அலுவலகம் தொடர்பான ஒரு சட்ட மூலம் பாராளுமன்றத்தில் வரும்‌ பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கக்கூடிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அதாவது என்னை தவிர ஏனைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமூலத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கான அலுவலகம் வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை சட்ட மூலமாக ஆதரித்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களோடு காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறவர்களுக்கான இந்த அலுவலகம் தொடர்பான  சாதக ,பாதக நிலைமைகள் என்ன என்பதை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் அவசர அவசரமாக அரசாங்கம் சர்வதேச சமூகத்தை  ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படுகின்ற இந்த சட்டமூலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள்.

இன்று வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேட்கும் விடயம் என்னவென்று கூறினால் எங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறவர்களுக்கான அலுவலகத்திலேயே நம்பிக்கை இல்லை. காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறவர்களின் அலுவலகம் தேவையில்லை என்பதை  தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே இந்த அரசாங்கம் எம்மவர்களையும் அதற்கொரு பலிகடா ஆக்கியிருக்கின்றார்கள்.

ஆகவே இந்த காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றவர்களுக்கு சர்வதேச சமூகம் விரைந்து ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை தான் இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்திலேயே அனைவர் சார்பிலும் கேட்டுக் கொள்வதாக மேலும் தெரிவித்தார்.