மாணவ, மாணவிகளை தங்கள் வீடுகளுக்கு எந்த காரணங்களுக்காகவும் பேராசிரியர்கள் அழைக்கக் கூடாது என சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை ஒன்றை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுப்பியுள்ளது. இதில் பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டிருப்பதாவது:
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்தால் மாணவ,மாணவியர்கள் அங்கு செல்லக்கூடாது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் மாணவர்கள் நிர்வாகத்திடம் உரிய அனுமதி கோர வேண்டும். பேராசிரியர்கள் அழைப்பு விடுக்கக் கூடாது.
பாலியல் தொந்தரவு அற்ற வளாகமாக மாற்றும் முயற்சி இது. பாலியல் தொந்தரவு இருந்தால் பல்கலைக்கழக பேராசிரியை ரீட்டா ஜான் தலைமையிலான குழுவிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள் தரப்பிலோ, பேராசிரியர்கள் தரப்பிலோ தவறு இழைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.