தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்? – திருச்சி சிவா விளக்கம்

486 0

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்ப்பது ஏன்? என்பது குறித்து நாகர்கோவிலில் நடைபெற்ற கருணாநிதி நினைவு தின பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பதில் அளித்தார்.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சுரேந்திரகுமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மகேஷ், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், பெர்னார்டு, லாரன்ஸ், கேட்சன், ஜோசப்ராஜ் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்று பேசினார். அப்போது கூறியதாவது:-

கருணாநிதியின் மறைவை யாராலும் மறக்க இயலாது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கருணாநிதி கால் பதித்து இருக்கிறார். மு.க.ஸ்டாலினும் தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். தி.மு.க. நிர்வாகிகளையும் செல்லும்படி கூறுகிறார். எனவே மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தி.மு.க.வுக்கு தெரியும்.
திமுக

தி.மு.க. ஆட்சியில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாங்கும் சக்தி அனைத்தும் இருந்தது. ஆனால் தற்போது கல்வி தரவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் வேலை கிடைப்பது இல்லை. வேலை கிடைத்தாலும் அது நிரந்தரமாக இருப்பதில்லை. படித்த ஆண்களும், பெண்களும் மாதம் 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறார்கள். அதே சமயத்தில் ஒரு தொழிலாளி தினமும் 400 ரூபாய் சம்பாதிக்கிறான். இந்த நிலை மாற வேண்டும்.

தமிழகத்தில் வேளாண் தொழில் நலிந்து வருகிறது. இதற்காகத் தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இதுபோன்ற திட்டங்களால் எதிர்காலத்தில் பணப்புழக்கம் இருக்கும். ஆனால் உணவு இருக்காது. எனவே இதுபோன்ற திட்டங்கள் தமிழகத்துக்கு வேண்டாம். இதுதொடர்பாக கேட்க தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் தில்லைசெல்வம், உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.