இடையறுந்துபோன தமிழர் விடுதலைப்போராட்ட அஞ்சலோட்டத்தை தொடரமுடியாது தடுக்கும் சுயநல அரசியல்! மயிலையூர் ம.ஏகலைவன்

468 0

இடையறுந்துபோன தமிழர் விடுதலைப்போராட்ட அஞ்சலோட்டத்தை தொடரமுடியாது தடுக்கும் சுயநல அரசியல்! மயிலையூர் ம.ஏகலைவன்!

தமிழர்களது அரசியல் எதிர்காலத்தின் இருண்ட காலத்தின் நுழைவாயிலாக சிறிலங்கா சனாதிபதித் தேர்தல் அமையப்போகிறது. கடந்த கால இருண்ட யுகத்தின் பட்டறிவின் வழியே மொட்டு வேட்பாளரை தமிழர்கள் ஒருபோதும் ஆதரிக்கவே முடியாது. கொங்கிறீட் வீதிகளுக்காகவும், வீட்டுத்திடங்களுக்குமாக ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரையும் ஆதரிக்கவும் முடியாது.

இந்நிலையில் தமிழர்கள் வாக்களித்தால் பின்னவரும் வாக்களிக்காது விடில் முன்னவரும் வெற்றிபெறுவது உறுதியென்ற எதிர்வுகூரல்கள் கூறப்பட்டு வருகின்றது. இத்துர்ப்பாக்கிய நிலை களைந்து, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி பொதுவேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவது குறித்த எண்ணத்தையே சிந்தனை வெளிக்கு அண்மித்ததாக எடுக்கவே தமிழ் அரசியல் தரப்புகள் தயாராக இல்லை.

2005 சனாதிபதித் தேர்தல் முதற்கொண்டு இன்று வரை தமிழர் வாக்குகளே பௌத்த சிங்கள சிறீலங்கா தேசத்தின் ஆட்சியாளரைத் தீர்மானித்து வருகிறது. இவ்வரலாற்றுப் போக்கினை தீர்க்க தரிசனமாக உணர்ந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் அரசியல் தலைமையை தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கியிருந்தார்.

தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்த அயோக்கியத்தனமாக, அரசியல் அரங்கிலிருந்து வெகுதூரத்திற்கு தூக்கியெறியப்பட்டிருந்தவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருந்த தமிழர்களது விடுதலைப் போராட்டத்தையே வல்லாதிக்க-சிங்கள தரப்புடன் கூட்டுச்சேர்ந்து அழித்தது மட்டுமல்லாது முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்திற்குமல்லவா வித்திட்டிருந்தார்கள். அது மட்டுமா, நடந்த தமிழினப் படுகொலைக்கான பரிகார நீதியைக் கூட கிடைக்கவிடாது தடுக்கும் கோடரிக்கம்புகளாகவுமல்லவா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளின் செயற்பாடுகள் இருந்து வருகின்றது.

அறவழி மற்றும் ஆயுதப் போராட்டங்களின் பின்னணியில், சுதந்திர சிறிலங்காவின் அறுபது ஆண்டுகளில் ஒற்றையாட்சி அடிப்படையிலான சிறிலங்கா அரசியலமைப்பை நிராகரித்து தெளிவுடனும், துணிவுடனும் சிறிலங்கா தேசத்தின் தேர்தல்களை தமிழர்கள் எதிர்கொண்டு வந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகால அடிபணிவு அரசியல் போக்கானது இன்றைய கையறு நிலையில் தமிழர்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் அஞ்சலோட்டத்தில், அறவழிப் போராட்டத்தின் முடிவில் தொடக்கத்தை கொடுக்கும் விதமாக ஆயுதப்போராட்டம் வீச்சுப்பெற்றெழுந்திருந்தது. ஆயுத மௌனிப்பின் தொடர்ச்சியாக மீண்டும் அறவழி அரசியல் போராட்டத்தை முன்னெடுக்காது இணக்க அரசியலின் பெயரால் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையில் முக்குழித்து ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றும் தென்னிலங்கை கட்சிகளின் சதிராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னையும் ஓரங்கமாக இணைத்துக் கொண்டதே பெரும் கேடாய் அமைந்துவிட்டது.

இதுதான் ஒருபக்கமென்றால் எதிர்த்தளத்தில் ஒன்றுபட்டு நின்று இவ்வரலாற்றுத் துரோகத்தினை கருவறுத்து இடையறுந்து போய்விட்ட தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அஞ்சலோட்டத்தை தொடரமுடியாதளவிற்கு தன்முனைப்பு, சுயநலம் மேலோங்கிய பிளவு நிலை பெருஞ்சாபக்கேடாய் தொடர்கிறது. இக்கையறு நிலையானது, தமிழ் மக்களது அரசியல் எதிர்காலத்தை முன்னெப்போதும் இருந்திராதளவிற்கு மீள முடியாத இருண்ட காலத்தின் நுழைவாயிலுக்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. இவ் அபாயத்தை உணர்ந்தவர்களாக தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தையும், இருப்பையும் கருத்தில் கொண்டு தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வையும் சுபீட்சமான எதிர்காலத்தையும் மனதார ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் கொள்கை வரைபொன்றின் அடிப்படையில் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். அதன் மூலமே சிறிலங்கா சனாதிபதித் தேர்தலை தமிழர்களது அரசியல் அபிலாசைகளை சர்வதேச-சிறிலங்கா-தமிழர் விரோத சக்திகளுக்கு இடித்துரைக்கவும், எதிர்வரும் பாராளுமன்ற, மாகாண சபை தேர்தல்களில் தமிழர்களின் ஒன்றுபட்ட அரசியல் பலத்தினூடாக தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவத்தை மறுவாசிப்பிற்குள்ளாக்கவும் முடியும்.

அவ்வாறு இல்லையேல், கூட இருந்தே கழுத்தறுத்தவர்களையும், குழி பறித்தவர்களையும், காட்டிக்கொடுத்தவர்களையும், கொலை செய்தவர்களையும் ஏன் இனப்படுகொலையாளிகளை விடவும் மிக மோசமான தமிழினத் துரோகிகளாக வரலாறு சுட்டி நிற்பது திண்ணம்.

மயிலையூர் ம.ஏகலைவன்