சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்கு முயற்சி-அஜித்

429 0

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு கோரலின் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்பட வேண்டும் என ஐ.தே.கவின் யாப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு கோரிய பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்பட வேண்டும் என கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிசங்கா நாணாயக்கார நேற்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இரண்டு முக்கிய கட்சிகள் ஏற்கனவே தேர்தலுக்கான பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதாகவும், தேர்தல் ஆணையம் கூறும் வரை வேட்பாளரை பெயரிட கூடாது என கட்சி யாப்பில் எங்கும் சொல்லப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

எனவே இது அரசியல் ரீதியாக தவறான அறிக்கை எனவும் கூறிய அவர், ஐ.தே.வின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் என்ற நிலைப்பாட்டிலேயே நிசங்கா நாணாயக்கார இருப்பதாகவும் அவர் கூறினார்.

கட்சி சார்பாக அத்தகைய அறிக்கையை வெளியிட அவருக்கு அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவை தாமதப்படுத்தும் மற்றும் அவரது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதில் நிசங்கா நாணாயக்கார ஒரு பங்கை வகிப்பதாகவும் அமைச்சர் அஜித் பி பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.