கல்முனையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி பாரிய போராட்டம்

512 0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில்   கல்முனையில் பாரிய பேரணி முன்னெடுக்கப்பட்டது.கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்த மகஜர் கையளிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன்  ஆகியோரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கையளிக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை  சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புக்களின்  பிரதிநிதிகள், உறவினர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள், பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும்  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலைக்காக கலந்துகொண்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் தமது ஆதங்கங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினர் .

அதில் 10 வருடங்களாக போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றோம். இதுவரை 35 பேருக்கு மேல் எம்மோடு இணைந்து வெயில் பனி மழை பாராது தமது உறவுகள் இன்று வருவார் நாளை வருவார் எதிர்பார்போடு உயிரை விட்டுள்ளார்கள்.நாம் அரசிடம் நேரடியாக சந்தித்து மகஜர் கையளித்தோம் பல போராட்டங்களை முன்னேடுத்தோம் எதையும் அரசு செவிசாய்ப்பதாக இல்லை எமக்கான நீதி அரசாங்கம் மூலம் கிடைக்கவில்லை. நாம் வீதிகளில் நின்று கத்தும் ஒலி சர்வதேசத்திற்கு கேக்கவில்லையா? அரசியல் தலைவர்களின் மாற்றங்களினால் நாங்கள் கூட காணாமல் போவதற்கு சாத்தியகூறுகள் உள்ளன. அரசாங்கம் மாற முதல் சர்வதேசம் கவனத்தில் கொண்டு எங்களுடைய உறவுகளை மீட்டுத்தர முயற்சி செய்ய வேண்டும். இன்று வடக்கில் ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும்  போராட்டம் இடம்பெற்றது. அனைத்து தமிழ் உறவுகள், பொது அமைப்புகள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பேரணியில் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டவர்களால் வெள்ளைவானில் கொண்டு சென்றவர்கள் எங்கே? பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்  சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய்  கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே? கையில் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே?  எம் உறவுகளை கொலை செய்தவர்கள் கடத்திய பதவியை வழங்குவதுதான் நல்லாட்சியா? போன்ற வாசகங்களை அடங்கிய பதாதைகளை கையில் தாங்கி தமது உணர்வுகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.