“இலங்கை அரசே உண்மையை மறைக்காதே. ஒரு நாள் உண்மை நிச்சயம் வெளிவரும்” எனக் கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று (வெள்ளிக்கிழமை), மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலக்ததிற்கு முன் குறித்த போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், குறித்து அரசாங்கம் உரிய பதிலை இன்னும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள், சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டம் முழுவதிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள், உறவினர்கள், அருட்தந்தையர்கள், மத குருக்கள், சமூக ஆர்வலர்கள், மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர், ‘நிலைமாறுகால நீதி எங்கே?’, ‘இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் உண்மை வெளிவரும்’, ‘இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கறையில்லையா?’, ‘உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல இவர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்’ உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி கண்ணீருடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மன்னார் நகர சபை மண்டபம் வரை ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது.