மொராக்கோவில் தெற்கு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் தரவ்டன்ட் மாகாணத்தின் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் திசர்ட் கிராமத்தின் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. வறண்டு கிடந்த ஆற்றின் அருகே கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளம் வந்ததால் அவர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்.
ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஒருவரைக் காணவில்லை என கூறப்படுகிறது.
தடா மாவட்டத்தில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், அந்த வீடுகளில் வசித்தவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.