எந்தவொரு கட்சிக்கு சார்பாகவும் கருத்து தெரிவிக்கவில்லை-மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

250 0

எந்தவொரு சந்திர்ப்பத்திலும் தான் ஒரு கட்சிக்கு சார்பாக கருத்து தெரிவிக்கவில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இருந்து வருகைதந்த ஆயர்கள் குழாமுடன் இன்று காலை கண்டி தலதா மாளிகைக்கு சென்ற ஆண்டகை இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது எமது பொறுப்பு என கூறினார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் குறித்து முறையான விசாரணைகள் நடைபெறுவதில் திருப்தி இல்லை என்றும் கர்தினால் தெரிவித்தார்.

பலரும் பல விடயங்களை செய்வதாக கூறினாலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சில விசாரணைகளை நடத்த வேண்டும் என கூறியதோடு, தற்போது அனைவரின் கவனமும் அதிகாரத்தை பெறுவதற்காக திரும்பியுள்ளது எனவும் கூறினார்.

அவை செய்யப்பட வேண்டியதொன்றல்ல எனவும் ஏற்பட்ட அழிவினால் பாதிக்கப்பட்டுள்ள இதயங்களின் வலியைக் குறைக்கவே ஆட்சியில் உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தேர்தலுக்கு முன்னர் இது சம்பந்தமாக ஏதேனும் நடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள கர்தினால், ஆட்சியில் இருப்பவர்கள் தொடர்ந்தும் அமைதியை கடைபிடித்து வருவதாகவும், ஜனாதிபதி கூட சாதகமாக பதிலை வழங்காதிருப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன்போது வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர் கோட்டாபயவிற்கு தற்போது அதிகாரம் இல்லாததால் அதிகாரத்தில் உள்ளவர்கள் இது குறித்து சிந்தித்து நீதி வழங்க வேண்டும் என கூறினார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும், இதனால் வரலாறு முழுவதும் நடந்த கொலைகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றம் என நம்ப முடியாது என்றும் அவர் கூறினார்.

எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்க சுயாதீனமான ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் எனவும் கார்தினால் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், தான் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் இடமளிக்காமல் நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்துவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்ததாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.