பல்கலை மாணவர்கள் கொலை-கிளிநொச்சியில் கண்டனப் போராட்டம்(காணொளி)

618 0

kilinochchiயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில், பொது அமைப்புக்கள் மற்றும் கல்விசார் அமைப்புக்கள் இணைந்து கண்டனப்பேரணி ஒன்றினை நடத்தியுள்ளதுடன் மகஜரும் கையளித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் வைத்து பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு பக்கசார்பற்ற நீதியான விசாரணை கோரியும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் வர்த்தக சமுகத்தினர் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணியானது இன்று பகல் 10.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமுன்றலில் இருந்து ஆரம்பமாகி ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று, ஜனாதிபதி மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கான கண்டனக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை மாவட்ட மேலதிக அரச அதிபர் திரு.எஸ்.சத்தியசீலனிடம் கையளித்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மதத்தலைவர்கள் பொது மக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டு கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு கொலைக்கு எதிரான சுலோகங்களையும் தாங்கியவாறு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.