ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஐ.தே.கவினால் உருவாக்கப்பட்டது-இசுறு

210 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இரு வேறு துருவங்களாக போட்டியிடும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரக் கட்சி தெளிவான முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறான வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் இந்தமுறை இரண்டு பிரதான கட்சிகளும் இரு துருவங்களாக பிரிந்து போட்டியிடும் என அவர் தெரிவித்த அவர், எந்வொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்காது எனவும் கூறினார்.

சுதந்திரக் கட்சி, ஐ.தே.கவால் உருவாக்கப்பட்டிருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பதிலும் ஐ.தே.கவிற்கு கைபொம்மையாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஐ.தே.க இந்தமுறை பொது வேட்பாளரை நிறுத்துவதாகவும், அதன் மூலம் அவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி மீதான மக்கள் நம்பிக்கை இப்போது சரிந்து போயுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அந்த கட்சியால் இனிமேல் எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானமிக்க சக்தியாக இருக்கும் எனவும், ஜனாதிபதியின் தலைமையில் அது உறுதிப்படுத்தப்படும் எனவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.