தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

379 0

மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.மிழக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த கல்வி தொலைக்காட்சியை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் ஒரு ஆண்டாக நடந்து வந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 10-வது தளத்தில் கல்வி தொலைக்காட்சி அலுவலகம், ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சோதனை ஓட்டம் நடந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளன. கல்வியாளர்களின் கலந்துரையாடல்கள், நுழைவுத்தேர்வு குறித்த விளக்கங்கள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், கல்வி உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள், பாட வல்லுனர்கள் நடத்தும் சிறப்பு வகுப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
மேலும், வேலைவாய்ப்பு செய்திகளும், சுயதொழில் தொடர்பான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட உள்ளன. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் கல்வி தொலைக்காட்சியை அரசு கேபிள் டி.வி.யில் சேனல் எண்.200-ல் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சியை பள்ளிகளிலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி கல்வித்துறை, அரசு பள்ளிகளில் கேபிள் டி.வி. இணைப்புகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 53 ஆயிரம் பள்ளிகளிலும் இந்த தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் குழுவினர் தயாரிக்க உள்ளனர் என்றும், ஆசிரியர்கள் தவிர கல்வி நிபுணர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களையும் நிகழ்ச்சிகளை வழங்க அழைப்பு விடுத்துள்ளோம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.