சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களை புரிதல்

1229 0

விளிம்பு நிலை மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்புக்கள் பல தாசாப்தங்களாக இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் ஐநா 1945இல் ஆரம்பித்த போதே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற பெயரில் அமைப்புக்கள் உருவாகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்களே இருந்தன. இந்த ஆரம்ப கால அரசசாரபற்ற நிறுவனங்கள் சமூக நலனுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து இயங்கியதால் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இந்த ஆரம்பகால நிறுவனங்கள் ஒரு நற்பெயரை தேடிக்கொடுத்தன. 80களில் தான் அரசசார்பற்ற நிறுவனங்களின் தொகை பிரமிப்பை தரும் அளவுக்கு அதிகரித்தன.

அரசசார்பற்ற நிறுவனங்கள் எங்கிருந்து தம் நிதியை பெற்றுக்கொள்கின்றன என்பதை சிந்தித்தால் சில தெளிவுகள் ஏற்படும். இவர்களுக்கு கிடைக்கும் பெரும்பாலான நிதி அரசுகளிடமிருந்தும், அரசு சார்ந்த அமைப்புக்களிடமிருந்தும் கார்பரேசன்களிடமிருந்துமே பெறப்படுகின்றன. இதனால் நிதி கொடுப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு இவர்கள் மறைமுகமாகவேனும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பது தெளிவல்லவா? இவர்கள் ஒருபோதும் நிதி கொடுப்பவர்களுக்கு எதிராக போராட முன்வர மாட்டார்கள். நிதி கொடுப்பவர்கள் போடும் வரம்புகளுக்குள்ளேயே நின்று பெறக்கூடியவற்றையே ஆதரிப்பார்கள்.

மக்களுக்கான நீதியை ஒரு ‘மனித உரிமைகள் தொழிலாக’ மாற்றியதில் இந்த அரசசாரபற்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரும் பங்குண்டு. மக்களுக்கான நீதியை மனித உரிமை என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன. அநீதியின் உண்மை முகத்தை மறைத்து அதிகாரவர்க்கம் செய்யும் கொடூரங்களையும் போராடும் மக்களின் செய்கைகளையும் ஒரே தராசில் போட்டு இருவரிலும் குறைகண்டு பேசும் ஒரு கலாசாரத்தை உருவாக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் வழி செய்திருக்கின்றன. விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்ட காலத்தில் இதை ஈழத்தமிழர்கள் அப்பட்டமாக அனுபவித்தார்கள்.

ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்ட காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களின் நடத்தைகள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தன. விடுதலைப்புலிகளின் சிறுவர் போராளிகள் என்ற பிராச்சாரத்தில் யுனிசெப், கண்காணிப்புக்குழு மட்டுமல்லாமல் அன்று வன்னியில் இயங்கிய அரசசார்பற்ற அமைப்புக்கள் யாவுமே முடக்கிவிடப்பட்டிருந்தன. இவை தமக்கு நன்மை செய்வதாக நம்பிய மக்கள் இவ்வமைப்புக்களுக்கு முறைப்பாடுகளை கொடுத்தார்கள். இதே அமைப்புக்கள் ஒரு இனவழிப்பு நடக்கப்போகிறது என்று தெரிந்தும் சிங்கள அரசு வெளியேறச் சொன்னவுடன் வாலைச்சுருட்டிக்கொண்டு அன்று வெளியேறி சாட்சியமில்லாத ஒரு இனவழிப்புக்கு வழி செய்தன. இவையெல்லாம் இந்நிறுவனங்கள் யாருடைய நலனை முன்னிறுத்தி இயங்குகின்றன என்பதை தெளிவு செய்கிறதல்லவா? மேலும் சர்வதேச மன்னிப்பு சபையும், மனித உரிமை காப்பகமும் இதே வேலையைத்தான் செய்தன. அதனால் இவை பற்றிய ஒரு சிறிய விழிப்புணர்வு ஆவது ஈழத்தமிழர்களுக்கு உண்டு.

ஆனால் 2009 பின்னர் முளைத்த சர்வதே அரசசார்பற்ற நிறுவனங்களை எம்மில் பலர் நம்புகிறார்கள். இன்று புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியில் இயங்கும் சில அரசசார்பற்ற அமைப்புக்களின் பின்னணியையும் அவை எமது மனித வளங்களை பிளவுபடுத்துகின்றவா என்பதையும் நாம் ஆராய்ந்து தெளிய வேண்டும். நாம் இவற்றுடன் இணைந்து செயற்பட்டாலும் இவற்றின் பின்னாலுள்ள சக்திகளையும் இவை எமது இலக்கிற்கு எதிரானவையா என்பதையும் ஆராய்ந்து தெளிய வேண்டியது எமது கடமை.

அவ்விடயத்தில் எம்மிடையே பிரபலமாக இருப்பவர் தென்னாபிரிக்காவை சேர்ந்த யஸ்மின் சூகா. இவர்கள் போன்றவர்கள் நல்லவர்கள்தான். ஆனால் இவர்களின் அறியாமையால் இவர்களின் பின்னாலுள்ள சக்திகள் இவர்களை தமது தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். நாமும் இவர்கள் போன்றவர்களை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இவர்கள் எமது நன்மைக்காக இயங்குகிறார்கள் என்று நம்புவது ஆபத்தானது.

இதோ யஸ்மின் சூகா 2015ம் ஆண்டு மத்திய ஐரோப்பிய பல்கலைகழகத்தில் ஒரு நிகழ்வின் போது கொடுத்தார் நீண்ட நேர்காணல். அவர் கொடுத்த பதில்களிலிருந்து சிலவற்றின் தமிழாக்கம்.

கீழே:
‘சிறிலங்காவின் பிரச்சனை பற்றி எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. சிறிலங்காவின் கிறிக்கெட் அணியை பற்றி மட்டும் தான் அப்போது எனக்கு தெரியும். சிறிலங்கா பற்றி விசாரணை செய்து அறிக்கை எழுத எனக்கு ஐநாவிலிருந்து அழைப்பு வந்த போது எனக்கு மிகவும் ஆச்சரிமாக இருந்தது.

நான் விடுதலைப்புலிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. அவர்கள் செய்த கொடுமைகளின் கொடூரமும் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. இதில் மிகவும் அதிர்ச்சி தருவது என்னவெனில் அவர்கள் பெண்கள் மட்டும் கொண்ட ஒரு கரும்புலிகள் விசேட பிரிவை வைத்திருந்தார்கள். உலகத்திற்கு தற்கொலை தாக்குதல்கள் பற்றி கற்பித்து கொண்டிருந்தார்கள். ஜப்பானின் கமக்காசி விமான ஓட்டிகளுக்கு பின்னரான தற்கொலை தாக்குதல் காலமாக இது இருக்கிறது.

இந்த மோதல்களுக்கு நடுவில் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. இரண்டு தரப்பினருக்கும் அதில் ஆர்வம் இருக்கவில்லை. 2008 மட்டில் அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு கட்ட முடிவு செய்தது. இதில் சிறிலங்கா அரசுக்கு அதிக அதிஸ்டம் இருந்தது. ஏனென்றால் ஒரு பெரும் சர்வேதேச கூட்டு இலங்கை அரசு விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஆதரவு கொடுக்க ஆயத்தமாக இருந்தது. பிரச்சனை என்னவென்றால் இலங்கை அரசு விடுதலைப்புலிகளையும் பொதுமக்களையும் ஒன்றாகவே பார்த்தது.

2008 செப்டம்பர் மாதத்திலிருந்து 2009 மே மாதம் வரை இடம்பெற்றவை, ஒரு குறுகிய காலத்தில் அதிக மக்கள் கொல்லப்பட்ட ஒரு அண்மைக்கால நிகழ்வாக இருக்கிறது.

விடுதலைப்புலிகள் நிச்சயமாக மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தார்கள்.

இங்கிருந்து கொடுமைகளை காட்டும் படங்கள் போரை நிறுத்தும்படி கேட்டு வந்த வண்ணம் இருந்தன. ஆச்சரியம் என்னவென்றால் வெளியே எல்லோரும் இலங்கை அரசு விடுதலப்புலிகளை அழிப்பதையே விரும்பினார்கள்.

தற்கால தொழில் நுட்பத்தால் என்ன நடக்கிறது என்று தெரிந்தும் ஐநாவும் ஏனைய சக்தியுள்ள நாடுகளும் 100.000 மக்கள் கொலை செய்யப்படும்போது இதை எவ்வாறு பார்த்துக்கொண்டிருந்தன? என்ற கேள்விக்கு சூகாவின் பதில்.

இது ஒரு கடினமான கேள்வி. இப்போ ரோகிங்யா வீடியோக்களை பார்க்கும் போது நான் என்னையே கேட்பேன். ஏன் பாதிக்கப்படுபவர்களில் சிலரை பற்றி கரிசனை காட்டுவதும் சிலரை புறந்தள்ளுவதும் இடம்பெறுகிறது. ஊடகங்களும் இந்த மாதிரியே காட்டுகின்றன. தென்னாபிரிக்க பிரச்சனை போன்ற சில முரண்பாடுகளுக்கு தீர்வுகாண உலக மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். ஏன் இந்த வித்தியாசம்? எனக்கு தெரியாது. இதை நாம் மதிப்பிட வேண்டும்.

கேள்வி கேட்டவர்தான் ஐ-அமெரிக்காவையும் ஐ-நாவையும் ஓரளவாதல் விமர்சிக்கும் வகையில் கேள்விகள் கேட்டார். இவரோ ஊடகத்தில் பிழை போடுவதும் தனக்கு தெரியாது என்று சொல்வதுமாகவே இருக்கிறார். இவருக்கு உண்மை தெரியாதோ அல்லது தெரிந்தும் தெரியாதது போல பேசுகிறாரோ தெரியவில்லை. உண்மை பேசினால் இந்த தொழில் இவருக்கு கிடைக்காது என்பதுதான் இதிலுள்ள உண்மை.