யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவற்துறையினால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது.
இது தொடர்பில் கைதானவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை தொடர்ந்து எதிர்வரும் நொவம்பர் மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நகரமுதல் சிவகீதா பிரகாரன் உள்ளிட்ட நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாலியல் தொழிலுக்கு உதவியதாக தெரிவித்து 9 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஐந்து பேர் காவற்துறை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நான்கு பேரை எதிர்வரும் நொவம்பர் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மன்னார் – முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடற்படையினருடனான முறுகல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கடற்படை சிப்பாயிகள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கைதாகினர்.
இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் இன்று மீண்டும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.