எனக்கு ஜனாதிபதியாக போட்டியிட இன்னும் வாய்ப்பு இருக்கின்றது -குமார வெல்கம

230 0

எனக்கும் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு ராசி இருந்தால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 90 வீதமானோர் என்னுடனேயே இருக்கின்றனர் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இதுவரையில் எந்தவொரு கட்சிக்கோ, வேட்பாளருக்கோ ஆதரவு வழங்குவதாக அறிவிக்கவில்லை. எனது நேரமும், ராசிபலனும் நல்லதாக இருந்து, நாட்டு மக்களும் ஆதரவு எனின், எனக்கு ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தது முதல் அவருக்கு எதிராக பேசிய முதலாவது நபர் தான் எனவும், தான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்ல மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டை தூக்கி வீசிவிட்டுச் சென்றவர்களுக்கு இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவை என்ற உணர்வோ, சக்தியோ இல்லை. மஹிந்த ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ, தினேஸ் குணவர்தன போன்றவர்கள் நாட்டை முன்னெடுத்துச் செல்ல தகுதியானவர்கள்.

அன்று கோட்டாபய ராஜபக்ஸ குறித்து கதை பேசிய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று அவரைப் பற்றிப் பேசும் கருத்துக்கள் ஆச்சரியமாகவுள்ளதாகவும் குமார வெல்கம எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மத்துகமதேர்தல் தொகுதியில் உடகங்கொடவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.