யாராலும் ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்த முரண்பாடும் இல்லை என்று தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி கூட்டணி தொடர்பான உடன்படிக்கையில் கைசாத்திடப்பட்டதன் பின்னரே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் தேர்தலை வெற்றிக்கொள்வதற்கான பிரசார நடவடிக்கைகளுக்கு ஒன்றரை மாத காலம் தங்களுக்கு போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அலரிமாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச கருஜய சூரிய ஆகியோரும் இருக்கிறார்கள். கட்சியின் யாப்புக்கு அமைவாகவே எங்களின் தேர்தல் நடவடிக்கைகள் அமையும். அவசரப்பட்டு நாங்கள் வேட்பாளர்களை தனிபட்ட ரீதியில் அறிவித்து, அவருக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் கட்சியில் பிளவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.ஆகவே வேட்பாளரை தற்போது அறிவிக்க முடியாது.
ஆகவே இறதியாகவே ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்கப்படும். தேர்தலுக்கு ஒன்றரை மாதம் இருக்கும் போது எங்களின் வேட்பாளரை அறிவித்தால் எங்களால் வெற்றிக்கொள்ள முடியும். அமைச்சர் சம்பிக ரணவக்க இந்த கூட்டணியுடன் தொடர்ந்து பயணிக்கும் தீர்மானத்திலேயே இருக்கிறார்.