இலங்கையின் பாதுகாப்பிலும் இறைமையிலும் தலையிட அமெரிக்க தூதுவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
இராணுவத் தளபதி நியமனத்தில் அமெரிக்க தூதுவரின் கருத்தை கண்டித்து ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என விஜயதாச ராஜபக்ஷ எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தன்வசப்படுத்த சீன தூதுவர் எவ்வாறு எம்மீது அழுத்தம் பிரயோகித்து எமது நாட்டை அடிபணிய வைத்தாரோ அதே பாணியில் அமெரிக்காவும் எம்மை அடிபணிய வைக்க நினைக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மீதான விவாத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த விஜயதாச ராஜபக் ஷ எம்.பி,
“சுகாதார சேவையின் தரம் உருதியானதாக இருக்க வேண்டும். சர்வதேச தரம் உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் வைத்தியர்களின் நம்பிக்கையை உறுதிபடுத்தும் வகையிலும் அவர்களின் துறை பலமடைய வேண்டும்.
எமது வைத்திய சேவையின் எதிர்காலம் குறித்து பார்க்கையில் பாரிய அச்சுறுத்தல் நிலைமையே உள்ளது. இன்று நியமிக்கப்படும் வைத்திய துறையினர் வெளிநாடுகளில் சான்றிதல்களை பெற்றுக்கொண்டு இங்கு வந்து தமது அதிகாரங்களை கொண்டு வைத்தியராகின்றனர்.
இவர்களை நம்பி எம்மால் மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ள செல்ல முடியுமா? மக்களுக்கு எவ்வாறு இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது. இதில் பாரிய பிரச்சினை உள்ளது. சுகாதார அமைச்சு இதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
இன்று உள்ள வைத்திய சட்டம் காலாவதியான சட்டமாகும். இதனை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மக்களின் உயிருடன் விளையாடக்கூடாது.
ஆகவே இதில் சுகாதாரத்துறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் தவறிழைத்தால் நோயாளர்கள் போலியான வைத்தியர்களிடம் செய்யவேண்டிய நிலைமையே உருவாகும் “என கூறினார்.
இந்நிலையில் உரிய விவாதத்திற்கு அப்பால் சில காரணிகளை கூற வேண்டும் என சபையில் அனுமதியை பெற்ற விஜயதாச ராஜபக் ஷ, அமெரிக்க தூதுவரின் கருத்து குறித்து பேச ஆரம்பித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.