வடக்கு முதல்வரின் போராட்டத்தின் வெற்றியே இரட்டை நகர் உடன்படிக்கை!

394 0

kingston-jaffna-talks-181016-seithy-1கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக வீழ்ச்சியடைந்த பின்னர் அங்கு அவசர அவசரமாக மாகாண சபைத் தேர்தலை நடத்திய மஹிந்த அரசாங்கம் தன்னுடைய பொம்மையாக பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கி தனது கட்சியின் சின்னமான வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வைத்து கிழக்கு மாகாணம் மத்தியில் ஆட்சி புரியும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக முதலாவது வெற்றி வாதத்திற்கு அடிதளமிட்டார்.

கடந்த 2009 மே மாதத்துடன் இந்த நாட்டில் ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்ட போதும் வடமாகதணத்திற்கான ஒரு தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டியே வந்தது.

காரணம், வடமாகாணத்தில் தாம் தோல்வி அடைவோம். இது தனது வெற்றி வாதத்திற்கு குந்தகமாக அமைந்து விடும் என்றே கருதினார். இலங்கை மீது சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக கொடுத்து வந்த அழுத்தத்தின் விளையாவகவே மஹிந்த அரசாங்கம் வேண்டாவெறுப்பாக நான்கு வருடங்களின் பின் 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்தது.

பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்து வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் அப்போதைய செயலாளர் மாவை சேனாதிராஜா தயக்கம் காட்டியிருந்தார்.

இதேநேரத்தில் பங்காளிக் கட்சிகளில் இருந்து அதன் தலைவர்களை போட்டியிட வைத்து வடமாகாண முதலமைச்சர் ஆக்குவதற்கும் அந்தக் கட்சியினருக்கு விருப்பம் இருக்கவில்லை.

இந்த நிலையிலேயே வடக்கு மாகாணத்துடன் நீண்ட நாட்களாக எவ்வித தொடர்புகளும் அற்றிருந்த ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசராகிய சி.வி.விக்கினேஸ்வரனை முதலமைச்சர் ஆக்குவதற்கு அன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு நீதியரசின் மாணவனான சுமந்திரனை சம்மந்தன் பயன்படுத்தியும் இருந்தார். நீதியரசர் விக்கினேஸ்வரன் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று அரசியலில் களம் இறங்குவதற்கு மறுத்து விட்டார்.

பின்னர் பங்களாளிக்கட்சிகள் அனைவரையும் அழைத்து சம்மந்தன் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார். அதன்போது முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களை ஏற்றுக் கொள்வதற்கு இணங்க வைத்தார். அவர் ஒரு ஓய்வு பெற்ற நீதியரசர்.

அவரது கருத்துக்கள் சர்வதேச மட்டத்திலும் இராஜ தந்திர ரீதியிலும் அவதானமாக பரிசீலிக்கப்படும் என்ற கருத்தும் சம்மந்தனால் முன்மொழியப்பட்டது. அதிலிருந்த நியாயத்தை ஏற்றுக் கொண்ட அங்கதுவக் கட்சிகள் சம்மதமும் தெரிவித்திருந்தன. அதன் வெளிப்பாடாகவே இன்று வடமகாண முதலமைச்சர் தெரிவித்து வரும் கருத்துக்களை சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் கூர்ந்து அவதானித்து வருகின்றன.

விக்கினேஸ்வரனை முன்மொழிந்த தமிழரசுக் கட்சியினர் அவரது வெற்றிக்கு பாரிய அளவில் பங்களிப்பு செலுத்தினரா என்பது கேள்விக் குறியாகவே இருந்தது. இறுதி வரையில் தமிழரசுக் கட்சியின் ஒரு மட்டத்தில் விக்கினேஸ்வரனுக்கு ஒரு எதிர்ப்பு நிலை தேர்தல் முடியும் வரை இருந்ததை அவதானிக்கவும் முடிந்தது.

பங்களாளிக் கட்சிகளினுடைய கடுமையான உழைப்பும், தமிழ் மக்கள் அவரது கருத்துக்களில் கொண்ட நம்பிக்கையும் அவரது அபரிவிதமான வெற்றியை உறுதி செய்தது. தேர்தலுக்கு 20 நாட்கள் முன்பு வரையிலும் அவரை ஏற்காத யாழ்ப்பாணத்து மக்களில் பெரும்பகுதியானவர்கள் பின்னர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் அவரை ஏற்றுக் கொண்டு வாக்குகளை அள்ளி வீசினர். அதன்பின்னர் இன்று வரையில் தமிழரசுக் கட்சியினருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் உள்ள மனத்தாங்கல்கள் அனைவரும் அறிந்ததே.

முதலமைச்சர் என்பவர் ஒரு ஓய்வு பெற்ற நீதியரசராகவும் இருப்பதால் முடிந்தவரை ஒரு நேர்மையான நிர்வாகத்தை தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும், உரிமைக்காக போராடி பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் சமூகத்திற்கும் வழங்க வேண்டும் என்று செயற்பட்டு வருவததை காணமுடிகிறது.

வடக்கு மாகாண சபை உருவாகுவதற்கு முன்னர் திவிநெகும போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டு 13வது திருத்த்தின் கீழ் மாகாண சபைகளுக்கு குறித்து ஒதுக்கப்பட்டிருந்த அதிகாரங்களை பறிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. புதிதாக அமைந்த மகாணசபைக்கு நிர்வாகத்தை கொண்டு செல்வது ஒரு எளிமையான காரியமாக இருக்க வில்லை. மஹிந்தா அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆளுனரின் தலையீடுகள் மாகாணசபை நிர்வாக நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போட்டது.

மகாண சபை என்பது வெறுமனே தீர்மானத்தை இயற்றி அந்த தீர்மானத்திற்கான ஒப்புதலை பாராளுமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையிலேயே காரியமாற்ற வேண்டிய சூழலுக்கு உள்ளானது. வரவு செலவுத் திட்டதின் மூலம் மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கூட பெருமளவில் மீண்டும் எழும் செலவுகளை சமாளிப்பதற்காகவே ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னனியில் தன்னை சந்தித்த அனைத்து நாட்டு அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகளிடம் வடக்கு மாகாணத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகள் குறித்து முதலமைச்சர் தவறாமல் சுட்டிகாட்டியிருந்தார். மாகாண சபை தொடர்பிலும் மக்களிடமும் பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டிருந்தது.

2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னரும் கூட இந்த நிலமை தொடர்ந்திருந்ததை அனைவரும் அறிவர். போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு என்று விசேடமான தேவைகள் இருந்தமையால் அதற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருந்தது.

ஆனால் மத்திய அரசு போர் முடிந்த பின்னரும் கூட பாதுகாப்புச் செலவீனத்தை அதிகமாக ஒதுக்கியதுடன் போரால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மறுவாழ்வுக்காக போதியளவு நிதி ஒதுக்கவில்லை. உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய இனத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் ஒரு வெளிப்பாடே முதலமைச்சர் நிதியம் என்ற ஒன்றை உருவாக்குவதாகும்.

ஆனால், மஹிந்தா அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அதனை அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்த நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தில் அதற்கான அனுமதி கிட்டும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பலமாதங்கள் கடந்த நிலையிலும் அதற்கான அனுமதி கிட்டாமலேயே இருக்கின்றது.

இந்த நிதியம் ஏற்கப்பட்டிருக்குமாக இருந்தால் புலம்பெயர் உறவுகள் நேரடியாகவே தஙகளது பங்களிப்புக்களை செலுத்தியிருக்க முடியும். அதன் மூலம் வடக்கு மாகாண சபையும் தமிழ் மக்களுக்கு தன்னால் இயன்ற அதிகபட்ச உதவிகளையும் அபிவிருத்திகளையும் செய்திருக்க முடியும்.

முதலமைச்சரால் தொடர்ந்து வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் உடைய முன்னாள் பிரதமர் டேவிட் கமருன் அவர்களின் முயற்சியில் இலங்கை அரசாங்கத்தை ஓளரளவுக்கு இணங்க வைத்து இன்று முதலமைச்சருக்கும் கிங்ஸ்ரன் நகர மேயருக்கும் இடையில் இரட்டை நகர் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது வர்த்தகம், பொருளாதாம், கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் நுட்பம் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. தேசிய அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் பிரதமர் ரணிலின் கொள்கையானது இலங்கையை ஒரு சர்வதேச வர்த்தக கேந்திர மையமாக மாற்றுவதாக உள்ளது.

இதனடிப்படையிலேயே முதலமைச்சருக்கு இந்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. முதலமைச்சரும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கின்றார் என்று இப்பொழுது எண்ணத் தோன்றுகின்றது.

கிங்ஸ்ரன் மாநகரத்தில் சுமார் 12,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். கிங்ஸ்ரனில் தமிழ் இரண்டாவது மொழியாக காணப்படுகிறது. இந்த மாநகரத்தில் கடந்த 18 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் மூலம் பிரித்தானியாவில் உள்ள புலம் பெயர் தமிழ் உறவுகள் வடக்கில் முதலீடுவதற்கான ஒரு வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதி இதுவரை கிடைக்காத நிலையில் இந்த இரட்டை நகர் உடன்படிக்கை மூலம் புலம்பெயர் உறவுகளின் கணிசமான உதவிகளைப் பெற்று போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். அதனை வடக்கு முதலமைச்சர் சரியாக பயன்படுத்த வேண்டும்.

வருங்காலத்தில் காங்கேசன்துறை துறைமுகமும், பாலாலி விமான நிலையமும் பொது பயன்பாட்டிற்கு வரவிருப்பதால் எமது உற்பத்திகளை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு அதன் மூலம் எமது விவசாயிகள், விவசாய உற்பத்தியாளர்கள், சந்தைப்படுத்துபவர்கள், பொதி செய்பவர்கள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் பயனடையக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்.

இதற்கு ஏற்றால் போல் முதலமைச்சரும் என்ன என்ன விடயங்களில் கவனம் செலுத்தப் போகின்றோம் என்பதை லண்டனில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் லண்டனில் ‘பொருளாதாரம், மருத்துவம், கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளின் அபிவிருத்தி தொடர்பில் முதலீடுகள் கிடைக்கப் பெறுவதனால் அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது மூன்று முதலீட்டு முறைகளை அடிப்படையாக கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளில் வட மாகாண சபை ஈடுபட்டு வருகின்றது.

தனியார் மற்றும் பொது மக்கள் பங்களிப்பு முதலீடு புலம்பெயர் முதலீடு போன்ற முதலீட்டு முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாபெரும் புதிய திட்டம் ஒன்று மத்தியக் கிழக்கு நாடுகள் போன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக வன்னி பகுதியில் உணவு மற்றும் பழங்கள், மரக்கறி போன்ற உற்பத்திகளை மேற்கொண்டு அவற்றை சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட தொழிநுட்பக் கற்கை நெறிகள், நிறுவனங்கள் அமைப்பது மற்றும் இளைஞர் யுவதிகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றப்படவுள்ளது.

அத்தோடு சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதோடு சமாதானம் நீதி என்பன நிலைநாட்டப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த முன்மொழிவுகள் வரவேற்கத் தக்கவை. நடைமுறை சாத்தியமும் கூட. இத்துடன் சுற்றுலாத் துறையையும் சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். முதலமைச்சர் இந்த விடயத்தையும் கவனம் செலுத்துவார் என எதிர்பார்கின்றோம்.

கிங்ஸ்ரனைப் போன்றே பிரித்தானியாவின் ஏனைய நகரங்களும், சர்வதேச நாடுகளும் வடக்கு- கிழக்கு மாகாணத்தின் அனைத்து நகர கிராமங்களையும் தத்தெடுத்து நேரடியாக அபிவிருத்திப் பணிகளைச் செய்வதற்கும், போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பொருளாதார நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளத்தக்க வகையிலும் செயற்பட முன்வரவேண்டும்.

வடக்கு முதலமைச்சரின் கடும் போராட்டங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியே இந்த இரட்டை நகர் உடன்படிக்கை. பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் உறவுகள் அவருக்கு தமது ஆதரவுகளை வழங்கியிருக்கின்றனர். தொடர்ந்தும் வழங்க தயாராகவும் உள்ளனர்.

இதனால் வடக்கு முதலமைச்சர் முன்னெடுத்து இருக்கும் தமிழ் தேசிய மக்களுக்கான ஒரு நீதிக்கான, ஜனநாயக போருக்கான ஆதரவும், அந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஆதரவும் புலம்பெயர் தேசத்தில் நிறைவாக உள்ளது என்பதை அவரது லண்டன் விஜயத்தில் அவதானிக்க முடிகிறது.

தற்போதைய அரசியல் சூழலில் இதனை வடக்கு முதலமைச்சரும், தமிழ் தலைமைகளும், தமிழ் சிவில் சமூகமும், தமிழ் மக்களும் சரியாக பயன்படுத்துவதே 65 வருட உரிமைப் போருக்கான ஒரு நிவாரணமாக இருக்கும் என்பதே உண்மை.