வேலையற்ற பட்டதாரிகளுக்கு மூன்றாம் கட்ட நியமனம் மிக விரைவில் வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்கிழமை (20)காலை கல்வி அமைச்சில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இந்த மாதம் முற்பகுதியில் பட்டதாரிகள் 16800 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நியமனங்களின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் உள்வாரிபட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மூன்றாம் கட்ட நியமங்களில் உள்வாரி, வெளிவாரி என்ற பாகுபாடில்லாமல் பட்டம் முடித்த ஆண்டின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும்.
ஐக்கிய தேசிய கட்சியின் தனி அரசாங்கம் அமைத்த பின்னரே எம்மால் இவ்வாறான நியமனங்கள் வழங்க முடிகின்றது. பிரதமர் இந்த நியமனங்களை 2016 ஆம் ஆண்டே வழங்க முயற்சி செய்தார். ஆனால் அப்போது தேசிய அரசாங்கத்தில் காணப்பட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியினர் ஏற்படுத்திய தடையால் இதற்கான அமைச்சரவை அனுமதியை பெற முடியாமல் போனது என தெரிவித்தார்.