ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு அத்தியாவசியமானது என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பண்டுவஸ்நுவர – மதுல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குறிப்பிடுவதைப் போன்று சுதந்திர கட்சி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கவில்லை. காரணம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தான் முக்கிய இடம் வகிக்கின்றோம். எமது பலத்தை எதிர்காலத்தில் அனைவரும் புரிந்துகொள்வார்கள். அத்தோடு தற்போது எம்மை விமர்சிப்பவர்கள் தாமகவே வந்து எம்மிடம் ஆதரவைக் கோரும் போது எமது பலம் தெரியவரும்.
தற்போது பொதுஜன பெரமுன எம்மை இணைத்துக் கொள்ளாமல் அல்லது அறிவிக்காமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்களானால் அதனால் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோத்தாபய இவ்வாறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. அந்த கட்சியின் அங்கத்துவம் வகிக்கும் அரசியலில் பின்னடைந்திருக்கும் குழுவினர் தான் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கோத்தாபயவுக்கு எமது ஆதரவு அவசியமாகவுள்ளது. ஏனையவர்கள் எமது ஆதரவு வேண்டாமெனக் கூறினாலும் அவர் கூறவில்லை. பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி ஒன்றிணைவின் அவசியம் குறித்து அறிந்துள்ள அரசியல்வாதிகள் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதில்லை.
எனவே பொதுஜன பெரமுனவுக்குள் புறம் பேசிக் கொண்டிருப்பவர்கள் கூறும் விடயங்களுக்கு நாம் பதிலளிக்க விரும்பவில்லை. சில சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு பதிலளிக்கும் போது எம்மை பிரிவினைவாதியாக சித்தரிக்கிறார்கள் என்றார்.