விக்னேஸ்வரனால் மட்டுமே முடியும் – புகழேந்தி தங்கராஜ்

389 0

vikiவிக்னேஸ்வரன் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தவர்….. தமிழீழத் தாயகத்தில் வட மாகாண முதலமைச்சராக இருப்பவர். என்றாலும் உலகம் அவரை உற்றுக் கவனிப்பதற்கு அவர் வகித்த பதவியோ வகிக்கிற பதவியோ காரணங்களல்ல! அவர் சொல்வதை சர்வதேசம் காதுகொடுத்துக் கேட்பதற்கு அவர் மட்டுமே தமிழர் தாயகத்தின் மனநிலையை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்கிறார் என்பதுதான் காரணம்.

சென்ற ஆண்டு லண்டனில் அவர் நிகழ்த்திய உரை ஒரு வரலாற்று ஆவணம். இப்போது இரண்டு நாட்களுக்கு முன் லண்டனின் கிங்ஸ்டன் நகரில் அவர் ஆற்றியிருக்கிற உரை – தமிழர் தாயகத்தில் இலங்கையின் ராணுவமும் ஆணவமும் இன்றுவரை நீடிப்பதை மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

‘வடக்கில் ஒன்றரைலட்சம் ராணுவத்தினர் நின்றுகொண்டிருப்பது தான் வன்முறைக்கான அடித்தளம். மக்களின் நிலங்கள், வளங்கள், வாழ்வாதாரங்கள், வர்த்தகம், ஆகியவற்றை அபகரித்திருப்பதுடன் விதவைப் பெண்கள் போன்றோருக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது ராணுவம்…. வேறுவடிவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்வதால் அனைவரும் நீதி பெறும் வாய்ப்பும் இல்லை’ என்று வடக்கின் உண்மை நிலவரத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் விக்னேஸ்வரன்.

கிங்ஸ்டன் மாநகரசபை, யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகராக இணைவதை அறிவிக்கும் நிகழ்ச்சியில், அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட வந்திருந்த விக்னேஸ்வரன் இப்போதுள்ள நிலையில் தமிழர் தாயகத்துக்கு சர்வதேசத்தின் அரவணைப்பு எவ்வளவு அவசியம் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். (கிங்ஸ்டனின் இரண்டாவது அதிகாரபூர்வ மொழி தமிழ் – என்பது தெரியுமா உங்களுக்கு?)

வார்த்தைச் சிக்கனத்தில் விக்னேஸ்வரன் இன்னொரு வள்ளுவர். THE MILITARY IS A STUMBLING BLOCK (ராணுவம்தான் முட்டுக்கட்டையாக இருக்கிறது) என்று லண்டன் உரையில் அவர் குறிப்பிட்டிருப்பது பல்வேறு செய்திகளைச் சொல்கிறது.

போர் முடிந்துவிட்டதாக அறிவித்து ஏழு ஆண்டுகள் ஆனபிறகும் ஈழ மண்ணை விட்டு விலகாமல் நிற்கிறது இலங்கை ராணுவம். தமிழர் நலன்களுக்கும் தமிழரின் உரிமைகளுக்கும் மட்டுமே ராணுவம் முட்டுக்கட்டையில்லை. ஒன்றுபட்ட இலங்கை – என்கிற பௌத்த சிங்களப் பேராசைக்கும் அதுதான் முட்டுக்கட்டை. இதைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார் விக்னேஸ்வரன்.

‘பயங்கரவாத எதிப்பு – தேசப் பாதுகாப்பு என்கிற மனநிலைக்குள் இருந்துகொண்டு ஒரு ஒருங்கிணைந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது…. மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற மனநிலையே மற்றெல்லாவற்றையும் காட்டிலும் முக்கியம்’ என்பதையும் துணிவோடு தெளிவுபடுத்தியிருக்கிறார் விக்னேஸ்வரன்.

இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட ஒரு மண்ணில் அதற்கான நீதி கிடைக்காமல் நல்லிணக்கம் எப்படி சாத்தியம் – என்கிற கேள்வியையும் ‘ஐந்து பிரஜைகளுக்கு ஒரு ராணுவ சிப்பாய் நிற்கிற நிலையில் தமிழர் தாயகத்தில் எப்படி இயல்புநிலை திரும்பும்’ என்கிற கேள்வியையும் கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை எழுப்பியிருக்கிறார் விக்னேஸ்வரன். இப்போதும் எழுப்புகிறார். இதிலிருந்து ஈழத் தாயக நிலவரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது தெளிவாகிறது.

நடந்தது இனப்படுகொலை – என்றும் ராணுவத்தால் பெண்களுக்கு அச்சுறுத்தல் – என்றும் குற்றஞ்சாட்டுகிற விக்னேஸ்வரன் ஒரு சாதாரண பிரஜையல்ல! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர். அப்படியொரு பதவியிலிருந்தபடியே இலங்கை ராணுவத்தின்மீது அவர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுவதும் – சர்வதேசப் பிரதிநிதிகளிடம் இந்தக் கவலைகளைப் பகிர்ந்து கொள்வதும் சர்வ சாதாரண விஷயங்களல்ல!

விக்னேஸ்வரன் சொல்வது பொய்யென்றால் அதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசால் முடியும். இத்தனைக்கும் விக்னேஸ்வரன் மீது நடவடிக்கை எடு – என்று சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர். அப்படியிருந்தும் அவர்மீது கைவைக்க இலங்கை அரசால் முடியவில்லை. இலங்கை இந்த அளவுக்கு மௌனம் சாதிப்பதிலிருந்து விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு வலுவானவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டுகள் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுபவை அல்ல! அவை நேரடியானவை நேர்மையானவை. இலங்கை அரசுக்கும் சிங்களத் தலைவர்களுக்கும் இப்படியெல்லாம் நேர்மையாகப் பேசிப் பழக்கமேயில்லை. தந்தை செல்வா முதல் தம்பி பிரபாகரன் வரை தமிழினத்தை வழிநடத்திய அத்தனைப் பேரும் சிங்களத்தின் பொய் முகத்தை அறிந்திருந்தனர். இப்போது விக்னேஸ்வரன்.

தமிழர் தாயகத்தின் மனக்குமுறலை சர்வதேசத்துக்கும் எடுத்துச் சொல்வதில் பெருவெற்றியடைந்த ‘எழுக தமிழ்’ பேரணியில் விக்னேஸ்வரன் பேசியதைக் கூட நல்லிணக்கம் ஒருமைப்பாடு பற்றியெல்லாம் ஒருபோதும் கவலைப்படாத பௌத்த சிங்களப் பேரினவாதிகள் திரித்துக் கூறினர். அதன்மூலம் மதத் துவேஷத்தையும் தமிழினத்தின் மீதான வெறுப்புணர்வையும் தூண்டிவிடப் பார்த்தனர். அதை விக்னேஸ்வரன் முறியடித்த விதம் பௌத்தத் திமிரை உறியடித்தது.

தமிழர் தாயகத்தில் திடீர் திடீரென முளைக்கும் பௌத்த விகாரைகள் குறித்து எழுக தமிழ் பேரணியில் கவலை தெரிவித்திருந்தார் விக்னேஸ்வரன். இது என்ன நியாயம் – என்று கேட்டார். அதைத் திரித்து ‘பௌத்த விகாரைகளை விக்னேஸ்வரன் உடைக்கச் சொல்கிறார்’ என்று கொழும்பில் பிரச்சாரம் நடந்தது. ஒசாமா பின்லேடனுக்கு நடந்ததுதான் விக்னேஸ்வரனுக்கும் நடக்கும் என்று கள்ளப் புத்தர்கள் எச்சரித்தனர். ‘அமிர்தலிங்கத்துக்கு நடந்ததுதான் விக்கிக்கும் நடக்கும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார் சரத் பொன்சேகா.

இந்தப் பொய்ப்பிரச்சாரங்களையும் அவதூறுகளையும் இலங்கை அதிபர் மைத்திரிபாலாவை சாட்சியாக வைத்துக் கொண்டே விக்னேஸ்வரன் தகர்த்தெறிந்தது தனிக்கதை.

யாழ்ப்பாணத்தில் அக்டோபர் 2ம் தேதி நடந்த தேசிய விளையாட்டு விழாவில் பேசியபோது எழுக தமிழ் பேரணியில் தான் பேசியது என்ன என்பதை மேடையிலிருந்த மைத்திரிக்குப் புரியும் விதத்தில் சிங்களத்திலேயே விவரித்தார் விக்னேஸ்வரன். “NO ONE SHOULD BUILD PLACES OF WORSHIP IN ANYONE’S PRIVATE LAND WITH THE HELP OF MILITARY” என்று தான் சொன்னதற்கு ‘பௌத்த விகாரையை உடை’ என்பதுதான் பொருளா – என்று விக்னேஸ்வரன் கேட்டபோது மைத்திரிபாலா மட்டுமில்லாது ஒட்டுமொத்த இலங்கையும் தலைகுனிந்திருக்க வேண்டும்இ மனசாட்சி என்கிற ஒன்று அவர்களுக்கு இருந்திருந்தால்!

விக்னேஸ்வரனின் ஒளிவுமறைவற்ற நேரடியான போக்குதான் அவரது பலம் என்று நான் நினைக்கிறேன். காந்தியை உயிருக்குயிராக நேசித்த உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து காந்தி குறித்து எழுதிய நூலின் முன்னுரையில் ‘காந்தி நேரடியாகப் பேசுபவர்… ராஜதந்திரமெல்லாம் அறவே தெரியாது அவருக்கு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது நினைவுக்கு வருகிறது இப்போது!

விக்னேஸ்வரனுக்கும் ராஜதந்திரமெல்லாம் தெரிவதில்லை. காந்தியைப் போலவே நேரடியாகத்தான் பேசுகிறார் இவரும்! அதனால்தானோ என்னவோ ராஜதந்திரமில்லாத காந்தியைப் பார்த்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நடுங்கியதைப் போன்று விக்னேஸ்வரனைப் பார்த்து நடுங்குகிறது இலங்கை.

‘விக்னேஸ்வரனுக்கு ராஜதந்திரம் போதாது’ என்று புலம்பெயர் மேதாவிகள் சிலர் புலம்புகிற காமெடியையெல்லாம் பார்த்து ரசிக்கிறவன் நான். கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து அது உருகி கண்ணை மறைக்கிறபோது ஈஸியாப் பிடிச்சிடலாம் – என்கிற இவர்களது காமெடி பார்முலாவையெல்லாம் விக்னேஸ்வரனும் ரசிப்பார் என்றே நினைக்கிறேன். இந்த காமெடியன்களையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு நேர்ப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறார் அவர்.

எழுக தமிழ் பேரணியில் பல்லாயிரக் கணக்கில் கூடிய தாயக உறவுகளைப் பார்த்து பௌத்த சிங்கள எஜமானர்களைக் காட்டிலும் அதிக அதிர்ச்சிக்கு உள்ளானவர்கள் அகில உலக காமெடியன்களான இந்த ஏஜென்டுகள்தான்! புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து சிங்கள எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்ப வாழைப்பழத்தில் விஷம் வைத்துக் கொடுக்கிற வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

‘அப்படியொன்றும் பெரிய கூட்டமில்லை’ என்கிற இந்த ஏஜென்டுகளின் சாயம் அவர்கள் அப்படி முணுமுணுத்து முடிப்பதற்கு முன்பே கரைந்துவிட்டது. ஐந்து பேருக்கு ஒரு ராணுவ சிப்பாய் நிற்கிற தமிழர் தாயகத்தில் அச்சத்தை உதறி பல்லாயிரக் கணக்கில் திரண்ட மக்கள் வெள்ளத்தைக் காட்டும் காணொளிகள் இந்த ஏஜென்டுகளின் முகத்திரையைக் கிழித்தன.

இப்போது ‘காலம் கருதி இடத்தாற் செயின் – என்கிற வள்ளுவம் விக்னேஸ்வரனுக்குத் தெரியவில்லை’ என்கிற அடுத்த அலப்பரையை ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கையின் புதிய அரசியல் சாசனம் தமிழர் உரிமைகளை ஏற்பதாக இருக்க வேண்டும் – என்பதற்காகக் காலம்கருதி விக்னேஸ்வரன் கொடுத்திருக்கும் அழுத்தமே எழுக தமிழ் பேரணி என்கிற யதார்த்தத்தை அறிந்தவர்கள் இந்த ஏஜென்டுகளை அருவருப்பாகப் பார்க்கிற நிலை.

தமிழர்களுக்கு விடிவிளக்கு இவர்தான் – என்று இந்தக் கோமாளிகளால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவர்தான் ‘நடந்தது இனப்படுகொலை என்று யாரைக் கேட்டுத் தீர்மானம் போட்டீர்கள்’ என்று விக்னேஸ்வரனிடம் எரிந்து விழுந்தவர். இப்போது ‘முப்பது ஆண்டுகள் போராடி என்ன சாதித்தீர்கள்’ என்று ஒட்டுமொத்தத் தமிழினத்தின் மீதும் எரிந்து விழுகிறார். ராஜதந்திரக் கழைக் கூத்தாடிகளின் அரசியல் லட்சணம் இது!

விக்னேஸ்வரன் எரிந்துவிழுவதில்லை. அதே சமயம் இந்த இனம் சரிந்துவிடுவதில்லை என்பதை நிரூபிக்கத் தவறுவதுமில்லை. அதன் தொடக்கம்தான் ‘எழுக தமிழ்’.

தமிழர்களை வீழ்த்திவிட்டோம் – என்கிற இறுமாப்பில் மூழ்கியிருந்த பௌத்த சிங்கள வெறியர்கள் தமிழினத்துக்கு நீதி பெற முயல்கிற விக்னேஸ்வரனையும் அதற்கு அங்கீகாரம் தருகிற எழுக தமிழையும் பார்த்து அஞ்சுவதில் அர்த்தமிருக்கிறது. அந்த அச்சம்தான் ‘விக்னேஸ்வரனை நம்பினால் மீண்டும் முள்ளிவாய்க்கால்தான் மீண்டும் நந்திக்கடல்தான்’ என்றெல்லாம் தமிழர்களை அச்சுறுத்தும் விதத்தில் அவர்கள் பேசத் தொடங்கியிருப்பதன் அஸ்திவாரம். (சிங்கள அறிவுஜீவிகள் கூட இப்படிப்பட்ட கீழ்த்தரமான மிரட்டல்களில் இறங்குவது உள்ளபடியே கொடுமை!)

இருளில் போகிறவன் பயத்தை மறைக்கப் பாடிக் கொண்டே போவான் பாருங்கள்….. அதுதான் இது! விக்னேஸ்வரனைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை அறிந்தபிறகு அவருக்குப் பின்னால் தமிழர்கள் திரளுவதையாவது தடுத்துவிட வேண்டும் என்கிற நப்பாசை அவர்களுக்கு! அதனால்தான் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் என்றெல்லாம் மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த பகிரங்க மிரட்டல் ஒன்றுபோதும் – சிங்கள இலங்கையுடன் எப்படி சேர்ந்து வாழ முடியும் என்கிற கேள்வியை எழுப்ப!

லண்டனில் விக்னேஸ்வரன் பயன்படுத்திய ‘முட்டுக்கட்டை’ என்கிற வார்த்தை வலுவானது. உண்மையில் இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பதைத் தடுக்கவும் இலங்கை ராணுவம்தான் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

அதைப் புரிந்துகொண்டுதான் ‘ராணுவத்தினர் இழைத்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டாலும் அவர்களைத் தண்டிக்க இடம்தரக்கூடாது என்பதுதான் எங்களது நிலைப்பாடு’ என்று அவசர அவசரமாக அறிவிக்கிறது இலங்கை அரசு. ராணுவத்தைப் பயன்படுத்தி கோதபாயவும் மகிந்தனும் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்களோ என்கிற அச்சத்திலிருந்து இன்றுவரை மைத்திரியால் விடுபட முடியவில்லை.

இப்படியொரு நிலையில் விக்னேஸ்வரனின் அறிவுத் திறன் நேர்மையான அணுகுமுறை நம்பகத் தன்மை போன்றவை பௌத்த சிங்கள வெறியர்களுக்கு நிச்சயமாக எரிச்சலூட்டும். இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. சிங்களத் தரப்பில் விக்னேஸ்வரனுக்கு நிகரான ஒரு தலைமை உருவாக வாய்ப்பே இல்லாத சூழலில் இந்த எரிச்சல் மேலும் மேலும் அதிகரிக்கக் கூடும்.

இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேசத்தின் துணையுடன் பெறவும் அதன்மூலம் தமிழரின் உரிமைகளை நிலைநாட்டவும் இந்த இக்கட்டான காலக்க்கட்டத்தில் நமக்கு விக்னேஸ்வரனின் தலைமை அவசியம். ஒன்றரை லட்சம் பேரைக் கொன்று குவித்துவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது இலங்கை. அது தப்பியோடிவிடாமல் இருக்க முட்டுக்கட்டை போட்டாக வேண்டும். விக்னேஸ்வரன் ஒருவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும்!