நான் பாராளுமன்றத்தில் இருப்பது முழு மனதுடனா என உணர முடியாதுள்ளது-ரணதுங்க

235 0

அமைச்சுக்களினால் நடைமுறைப்படுத்தப்படும் சில வேலைகள் தாமதமாவதற்கு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளும் காரணம் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வேயங்கொடையில் நேற்று தாய் நாடு என்ற தொனிப்பொருளில் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அமைச்சர், தான் பாராளுமன்றத்தில் இருப்பது முழு மனதுடனா என தன்னாள் உணர முடியாதுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 6 மாத காலமாக அமைச்சுக்களினால் ஆற்றப்பட வேண்டிய வேலைகள் எதுவும் உரியமுறையில் இடம்பெறவில்லை எனவும் அவர் கூறினார்.

பஸ்களை கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சில் இருந்து எந்தவித பணத்தையும் கோரவில்லை எனவும், இதற்காக முதலீட்டாளர்களை சந்திப்பதற்கும் நிதியமைச்சு அனுமதியளிக்காவிடின் தாம் அமைச்சு பதவியை வகிப்பதில் என்ன நியாயம் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளை குற்றம்சாட்டும் சில அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளும் அமைச்சுக்களினால் நடைமுறைப்படுத்தப்படும் சில வேலைகள் தாமதமாவதற்கு காரணம் என கூறினார்.

எனவே சிறந்த போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு சில உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் தடையாக அமைந்தால் அதற்கான பொறுப்பை பிரதமரும், ஜனாதிபதியும் ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.