பேரம் பேசுவதற்கு இது பொன்னான சந்தர்ப்பம்!- செ.கஜேந்திரன்

387 0

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டதன் மூலம்  பேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு தமிழ் தரப்பிற்கு கிடைத்திருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முண்ணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். 

 

வவுனியா கனகராயன்குளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து‌ கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

அண்மையில் பொது ஐன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாநாட்டில் தமிழர்களிற்கு ஆபத்தான பல விடயங்கள் அறிவிக்கபட்டிருப்பதுடன் தமிழர்கள் மீது இன அழிப்பை மேற்கொண்ட கோத்தபய ராஜபக்ஷ ஐனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டிருக்கிறார். இது மீண்டும் முள்ளிவாய்கால் நோக்கி தமிழ்மக்களை அழைத்து செல்லும் என்ற அச்ச நிலையை அவர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் தமிழர் பகுதியை சிங்கள பௌத்த மயமாக்குகின்ற மிகவேகமான செயற்பாட்டை மேற்கொண்டு தமிழர்களை தனித்துவமாக வாழமுடியாத வண்ணம் செயற்பாடுகளை அரங்கேற்றிய ஒரு ஆபத்தானவர். அவர் எந்த சூழலிலும் வெற்றி பெற்று விடக்கூடாது.

தமிழர்களிற்கு ஆபத்தானவர் போலவே இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிற்கும் விரும்படாத ஒருவராகவும் அவர் இருக்கிறார். காரணம் இவர்களது காலப்பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எற்படும் விதமாக சீனாவின் ஆதிக்கம் மிகபெரியளவில் இலங்கையில் அதிகரித்திருந்தது.

எனவே அவர் வெற்றி பெற்றால் தமிழர்களிற்கு மாத்திரமல்லாமல் இந்தியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அவருக்கு எதிராக இந்தியா உட்பட அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் செயற்படும். இது தமிழர்களிற்கு ஒரு வாய்பான சூழல்.

எனவே இந்த நிலையில் தமிழ் தரப்பு கண்ணை மூடிகொண்டு முட்டாள்தனமாக இருந்து தொடர்ந்தும் ஒரு அழிவுப்பாதைக்கு செல்லாமல் பூகோள அரசியலை புரிந்து கொண்டு காத்திரமான முடிவினை எடுத்து  செயற்படவேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் இந்தியாவிற்கும், மேற்கு நாடுகளிற்கும் சார்ந்த ஒருவராகவே இருப்பார் அதனாலே கூட்டமைப்பும் அவரை ஆதரிக்க போவதாக அறிவித்திருக்கிறது. அப்படிபட்ட ஒருவரை வெற்றி பெறவைப்பதற்கு தமிழர்களின் வாக்குகள் நிச்சயம் தேவை.

தமிழர்களின் வாக்குகள் மூலமாக தான் அவரை வெல்லவைக்க முடியும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளபடுகின்றபோது, இந்தியாவிடம் தமிழ்மக்கள் ஒரு காத்திரமான பேரம் பேசலை முன்வைக்க வேண்டும், குறிப்பாக  இந்தியா தமிழ்தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை நிபந்தனையாக முன் வைக்கவேண்டும். எனவே பேரம் பேசுவதற்கு இது ஒரு பொன்னான சந்தர்ப்பம் என மேலும் தெரிவித்தார்.