சோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானம்

268 0

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும்வரை இலங்கையுடனான சோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இதன்போதே, அமெரிக்கா- இலங்கைக்கு இடையிலான சோபா உடன்பாட்டு தொடர்பான பேச்சை இடைநிறுத்துவது குறித்த நிலைப்பாட்டை, அமெரிக்கா சார்பில் தூதுவர் வெளிப்படுத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, சோபா உடன்படிக்கை தொடர்பாக தற்போது இலங்கையில் சமகால அரசியல் களத்தில் பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றமையால், ஜனாதிபதித் தேர்தல்வரை இதுதொடர்பாக எவ்விதப் பேச்சுவார்த்தையிலும் அமெரிக்கா ஈடுபடாது என அவர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகையைப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதென்றும் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் குறித்து விவாதிப்பதற்கான இலங்கையின் உரிமையை தாங்கள் மதிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கைக்கான புதிய அமெரிக்க துணைத் தூதுவரை அறிமுகப்படுத்துவதற்காக, அலெய்னா ரெப்லிட்ஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்னொரு சந்திப்புக்கு தற்போது அனுமதி கோரியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.