அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்-ரணில்

253 0

இலங்கை அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இளைஞர் – யுவதிகளை தன்னார்வ சேவையில் ஊக்குவிக்கும் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். சுமார் 2000க்கும் மேற்பட்ட இளைஞர் – யுவதிகள் இதில் கலந்துகொண்டனர்.

நேற்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாட்டின் அரசியல் யாப்பு மற்றும் கொள்கையை மாற்றுவதற்கு தாம் முன்னிற்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசியல் அடிப்படைக்கு மத்தியில் ஏனைய நாடுகளுக்கு அமைவாக அபிவிருத்தி காண்பதற்கு நம்மால் முடியாமல் உள்ளது. இதற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். தற்போது உள்ள நடைமுறையை உடனடியாக மாற்ற வேண்டும். இலங்கை அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

நாட்டிற்கு சரியான கொள்கை இருக்கின்றதா என்பது தொடர்பில் அனைவரும் கண்டறிய வேண்டும் என்றும் சர்வதேச இளைஞர் தினத்திற்கு அமைவாக இளைஞர் – யுவதிகளின் தன்னார்வ சேவையை ஊக்குவித்து, இவர்களுக்கு தேசிய மட்டத்தில் பாராட்டுக்களை பெற்றுக் கொடுப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.