தமிழகத்தில் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் சரியில்லை என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கோபியில் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கு முத்தாய்ப்பாக 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்தவுடனேயே பாஜக அதற்கான பொறுப்பாளர்களை நியமித்து களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள்.
தேர்தலை நடுநிலையோடும் நியமாகவும், நேர்மையாகவும் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். திமுக, அதிமுக வேட்பாளர்கள் பல குற்ற பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், பாஜக வேட்பாளர்கள் நேர்மையாக இந்த தேர்தலை சந்திக்க உள்ளனர். ஊழலற்ற நிர்வாகத்தை தரவுள்ளோம். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் உள்ளே செல்ல கவனம் செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் சரியில்லை. எதிர்கட்சியோ தொடர்ந்து வெளிநடப்பு செய்யும் கட்சியாக உள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு முன்பே தமிழகத்திற்கு தேர்தல் வரலாம் என ஸ்டாலின் கூறி வருகிறார். இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. காவிரி பிரச்சனை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட தி.மு.க.விற்கு தார்மீக உரிமையில்லை.
பிரதமர் ஏன் உடல் நலம் இல்லாமல் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க வரவில்லை என காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கேட்கிறார். இவர் அக்கட்சியின் தலைவரா? அல்லது அ.தி.மு.க வின் தலைவரா? என்பது தெரியவில்லை.
முதல்வரின் உடல் நிலையை வைத்து அரசியல் செய்யாதீர்கள். 3 தொகுதி இடைத்தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணிப்பதாக வைகோ அறிவித்துள்ளார். எதற்காக செய்கிறார்கள் என தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.