அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது

327 0

201610240953342251_thirumavalavan-says-viduthalai-chiruthaigal-party-not-to_secvpfதி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டவேண்டும் என்று எதிர்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வந்தன. ஆனால் தமிழக அரசு அதற்கு முன்வரவில்லை.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (25-ந்தேதி) அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பி இருந்தார். இந்த கூட்டத்தை அ.தி.மு.க., தே.மு.தி.க., பாரதிய ஜனதா மற்றும் மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக திருமாவளவனுக்கும், வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக திருமாவளவன் தற்போது அறிவித்து உள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சனை தொடர்பாக தி.மு.க. கூட்டுகின்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை மக்கள்நலக் கூட்டணி புறக்கணிப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்துள்ளார். 3 தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வது என்பது அனைவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டால் 3 தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு ஆதரவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளாது. ஆனால் முதன்முதலில் காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை ஆளுங்கட்சி கூட்டவில்லை என்றால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தை கூட்டவேண்டும் என்று நான் கருத்து கூறினேன்.

அப்போது அது திருமாவளவனின் கருத்து என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தற்போது இந்த கூட்டத்தை அவர் கூட்டி இருப்பதற்காக நான் அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் இடைத்தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் இந்த அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது உகந்தது அல்ல. எனவே நாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம். இதுகுறித்து சென்னையில் இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்து எங்கள் முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.