குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்ற ஐ.தே.க முயற்சி – எஸ். எம். சந்திரசேன

297 0

குறுக்கு வழியில்  ஆட்சியை கைப்பற்ற   ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து முயற்சித்ததன் விளைவே  இன்று கட்சி உட்பட நாட்டுக்கும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைமைத் துவத்தினை தன்வசமாக்கிக் கொண்டு  ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கும்  நிலைப்பாட்டிலே பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர்  எஸ். எம். சந்திரசேன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்   பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கணடவாறு  குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி கடந்த இரண்டு தசாப்த காலமாக நாட்டு மக்களிடம்  இருந்து நேரடியாக ஆட்சியதிகாரத்தை பெற்றுக் கொள்ளவில்லை.  தம்மை நாட்டு மக்கள் வாக்குகளினால் நிராகரிப்பார்கள் என்று  அறிந்து குறுக்கு வழியின் ஊடாக அதிகாரத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சிகளையே  ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டுள்ளது. தவறான தீர்மானங்கள் கட்சியையும் பலவீனப்டுத்தி அதன் விளைவு அனைத்து  அரசியல்  செயலொழுங்கினையும் பாதித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிறிதொருவருக்கு  ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டார். இதன் காரணமாகவே தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள்  பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றது.  கட்சியின் தலைமைத்துவத்தினை தம் வசப்படுத்திக் கொள்வதற்காக இம்முறை  பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கி அவர் ஊடாக பிரதமர் பதவியை  பெற்றுக் கொள்ளவே பிரதமர் முயற்சிப்பார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை  பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்.    நிச்சயம்  ஆட்சி மாற்றம் இடம் பெறும்  ஐக்கிய தேசிய கட்சிக்கு  எதிராக பலமான ஒரு   கூட்டணியை அமைக்க வேண்டுமாயின்     ஐக்கிய ஆளும் தரப்பினருக்கு எதிராக செயற்படும் அனைத்து  தரப்பினரும் பொதுஜன பெரமுனவுடன்  கைகோர்த்தல் அவசியமாகும் என்றார்.