கத்தார் நாட்டின் முன்னாள் அமீர் காலமானார்

323 0

201610241050249519_qatar-former-emir-dies-aged-84_secvpfகத்தார் நாட்டின் முன்னாள் அமீராக 23 ஆண்டுகள் பதவிவகித்த கலிபா பின் ஹமாட் அல்-தானி உடல்நலக்குறைவால் தனது 84-வது வயதில் காலமானார்.

பிரிட்டிஷ் அரசிடம் இருந்து கடந்த 1971-ம் ஆண்டு விடுதலைபெற்ற கத்தார் நாட்டின் ஆட்சித் தலைவராக (அமீர்) கடந்த 1972 முதல் 1995 வரை பதவி வகித்தவர் கலிபா பின் ஹமாட் அல்-தானி.

மிகச்சிறிய வளைகுடா நாடாக இருந்த கத்தார், இவரது ஆட்சிக்காலத்தில் பெட்ரோல் மற்றும் எரிவாயு போன்றவற்றை ஏராளமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து நின்றது.

தனது ஆட்சிக் காலத்தில் வளைகுடா பகுதியில் உள்ள ஆறுநாடுகளை ஒன்றிணைத்து வளைகுடா கூட்டுறவு குழு என்ற அமைப்பை ஏற்படுத்துவதிலும் இவர் முக்கிய பங்காற்றினார்.

கடந்த 1975-ம் ஆண்டு கலிபா பின் ஹமாட் அல்-தானி சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரது மகனான ஹமாத் பின் கலிபா அல்-தானி என்பவர் ஆட்சியை கைப்பற்றினார்.

பதவியை பறிகொடுத்த பின்னர் கடந்த 2004-ம் ஆண்டுவரை பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துவந்த
கலிபா பின் ஹமாட் அல்-தானி, பின்னர் தாய்நாடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று (23-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவால் முன்னாள் அமீர் கலிபா பின் ஹமாட் அல்-தானி காலமானார் என அவரது பேரனும், கத்தாரின் தற்போதைய அமீருமான ஷேக் தமிம் பின் ஹமாட் அல்-தானி அறிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரசின் சார்பில் மூன்றுநாள் துக்கம் கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த கலிபா பின் ஹமாட் அல்-தானிக்கு நான்கு மனைவியரும், பத்து மகள்கள் மற்றும் ஐந்து மகன்களும் உள்ளனர்.