வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், அதற்கு வரவேற்பு தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். பா.ம.க.வின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும், வேலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை மதித்தும் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இது போதுமானதல்ல. மாறாக, தமிழகத்தின் நிலப்பரப்பை நிர்வாக ரீதியாக சீரமைப்பதற்கு இது ஒரு நல்லத் தொடக்கமாகும். நான் மீண்டும், மீண்டும் கூறிவருவதைப் போல தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களையும் மறுவரையறை செய்வது தான் சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.
தெலுங்கானாவில் அவ்வாறு தான் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. ஆந்திராவிலும் அவ்வாறு தான் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படவுள்ளன. அதேபோல், தமிழகத்திலும் மக்கள்தொகை அடிப்படையில் மாவட்டங்களைப் பிரிக்க தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.