சந்திரயான்-2 விண்கலம் சிறப்பாக செயல்படுகிறது: இஸ்ரோ தலைவர் தகவல்

276 0
சந்திரயான்-2 விண்கலம் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. தற்போது நிலாவை நோக்கிய அதன் பயணம் வெற்றிகரமாக நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

 நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி உள்ள சந்திரயான்-2 விண்கலம் நேற்று அதிகாலை புவி சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி வெற்றிகரமாக நிலவை நோக்கி நகர்த்தப்பட்டது.

தற்போது சந்திரயான்-2 விண்கலம் நிலவை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த விண்கலத்தின் செயல்பாடுகளை இந்திய விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

நேற்று காலை அடுத்தக்கட்ட பயணத்தை தொடங்கியுள்ள சந்திரயான்-2 விண்கலம் 5 நாட்கள் பயணம் செய்து நிலாவை சென்று சேரும். அன்று விண்கலத்தில் உள்ள திரவ என்ஜின் இயக்கப்பட்டு அது நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் கொண்டு செல்லப்படும்.
சந்திரயான்2

அதன் பிறகு செப்டம்பர் 1-ந்தேதிக்குள் 4 தடவை நிலவின் சுற்றுப்பாதையை சந்திரயான்-2 விண்கலம் சுற்றி வருவது படிப்படியாக குறைக்கப்படும். இறுதியில் நிலவின் பரப்பில் இருந்து 100 கி.மீ. தொலைவில் சந்திரயான்-2 விண்கலம் சுற்றி வரும் வகையில் நிலைநிறுத்தப்படும்.

செப்டம்பர் 2-ந்தேதி விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்படும். அந்த லேண்டர் செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறக்கப்படும். அதன் பிறகு லேண்டர் அமைப்பில் இருந்த வெளிவரும் ரோஜர் வாகனம் நிலா ஆய்வை மேற்கொள்ளும்.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:-

சந்திரயான்-2 விண்கலம் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. தற்போது நிலாவை நோக்கிய அதன் பயணம் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

சந்திரயான்-2 விண்கலத்தின் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அது நிலா அருகில் சென்றதும் படம் எடுத்து அனுப்பும். அந்த புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

நிலவில் தண்ணீர் மற்றும் பிற கனிமங்கள் இருப்பது பற்றி ஆய்வு நடத்தப்படும். சூரிய குடும்பத்தின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த ஆய்வு மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.