விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட தடை!

275 0

நாட்டிலுள்ள சர்வதேச மற்றும் உள்ளக விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில், பட்டங்களை பறக்கவிட தடை செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில், 5 கிலோமீற்றர் வரையான உயரத்திற்கு பட்டங்களைப் பறக்கவிடுவது சட்டவிரோதமானதும் தண்டனைக்குரிய குற்றமுமாகும் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் முகாமையாளர் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தளை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம், இரத்மலானை, பலாலி, சிகிரியா, கொக்கல உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் இந்த நடைமுறை செல்லுபடியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளிலிருந்து விடப்படும் பட்டங்கள் மற்றும் நூல் என்பன ஜெட் விமானங்களின் எஞ்சின்கள் உள்ளிட்ட விமானங்களின் பாகங்களில் சிக்குண்டு விமான விபத்துக்கள் ஏற்படக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.