கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை, மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தோடு, எதிர்வரும் காலங்களில் பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே மாநகர சபையினால் சேகரிக்கப்படும் என்றும் கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக குப்பைகள் சேகரிக்கும் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காட்டுக்கு கொண்டுசெல்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வத்தளை – கெரவலப்பிட்டியவில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் மையத்தின் கொள்ளவு எல்லை கடந்ததால் மேலும் குப்பைகளை சேகரிக்க முடியாமற்போனது. இதனால் கொழும்பு நகரில் குப்பைகள் சேகரிக்கப்படாமல் தேங்கிக் கிடந்தன.
இதனையடுத்து புத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு குப்பைகளைக் கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு தடையின்றி இடமளிக்குமாறு வனாத்தவில்லு பிரதேச சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனையடுத்து கொழும்பு நகரசபை குப்பைகளை கொட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
எனினும் புத்தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட குப்பைகளை மக்கள் திருப்பி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.