மலரவுள்ள புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவும், பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நிச்சயம் பதவி வகிப்பார்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எப் பதவியை வழங்கலாம் என்பது தொடர்பில் இரு தலைவர்களும் பேசி தீர்மானிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் கன்னி சம்மேளனத்தில் விடுக்கப்பட்ட தீர்மானங்களை நாட்டு மக்கள் ஆவலுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். கட்சி பேதமின்றி நாட்டின் எதிர்காலம் கருதியே நாட்டு மக்கள் இத்தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பலமான ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் இன்று காணப்படுவதாகவும் அவர் கூறினார்.