அரசாங்கம் அரபு நாடுகளை புறக்கணிக்கின்றது – அசாத் சாலி

421 0

அரபு நாடுகளை அரசாங்கம் புறக்கணித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வி ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளது.

இதனால் அவர்களின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் 48 நாடுகளுக்கு 6 மாதங்களுக்கு இலங்கைக்கு வர இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அமைச்சரவை பத்திரத்தில் அரபு நாடுகள் ஒன்றின் கூட பெயர் இல்லை.

அத்துடன் சுற்றுலாத்துறை அமைச்சினால் பெயரிடப்பட்டிருக்கும் 48 நாடுகளும் எமது நாட்டை சூறையாட திட்டமிட்டவைகளும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை கைப்பற்றிக்கொள்வதற்காக உதவி செய்த நாடுகளாகும்.

ஆனால் அரபு நாடுகள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் கல்விக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாரியளவில் உதவி செய்திருக்கின்றன. அந்த நாடுகள் ஒன்றின் கூட பெயர் இடம்பெறாமல் இருப்பது, அரபு நாடுகளை விரக்திக்குள்ளாக்கும் செயலாகும்.

குறிப்பாக சவூதி அரேபியா நாட்டின் பல்வேறு அபிவிருத்திகளுக்காக 4ஆயிரத்து 800 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு உதவியாக வழங்கி இருக்கின்றது.

அதேபோன்று குவைத் அரசாங்கம் தென் கிழக்கு பல்கலைக்கழகத்துக்காக 800 மில்லியன்களை வழங்கியுள்ளது. டுபாய் அரசாங்கம் ஆயிரம் டொலர் மில்லியனுக்கும் அதிகம் நாட்டுக்கு உதவி செய்திருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் அரபு நாடுகளை புறக்கணித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுதொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி இருக்கின்றேன். விரைவில் அரசாங்கம் இந்த பிழையை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.