கோத்தபாய ராஜபக்ச குறித்து மகிந்த இந்திய ஊடகத்திற்கு தெரிவித்திருப்பது என்ன?

286 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அதிகம் பேசுபவரல்ல ஆனால் செயற்திறன் மிக்கவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சகுறித்து எதிர்கட்சிகள் பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் அவர் மோசமானவரில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களே கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஏற்கனவே தீர்மானித்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சியினர் சித்தரிப்பது போல கோத்தபாய ராஜபக்ச மோசமான மனிதரில்லை அவர் செயற்திறன் மிக்கவர் அதிகம் பேசமாட்டார் அமைதியாக செயற்படுபவர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் ஜனாதிபதியாக பதவி வகித்தால் – பிரதமராக அதிக அனுபவமுள்ள நான் பிரதமராக பதவி வகித்தால் நாங்கள் அனைவரும் இணைந்து மக்களிற்கு என்ன தற்போது தேவையோ அதனை வழங்க முடியும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் தற்போது சட்டமொழுங்கில்லை ஜனநாயகம் இல்லை தேர்தல்களும் இல்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கைக்கு பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் வழங்குவோம் என்பதும் இந்தியாவுடன் நல்லுறவுகளை உறுதி செய்வோம் என்பதும் புதுடில்லிக்கு தெரியும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களிற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச இது முற்றிலும் பொய் என குறிப்பிட்டுள்ளார்.

இது எங்களிற்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர்கள் முஸ்லீம் கிராமங்களை தாக்கிவிட்டு ராஜபக்சாக்களிற்கு வாக்களியுங்கள் என தெரிவிப்பார்கள்  என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச தற்போது முஸ்லீம் மக்களிற்கு உண்மை தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர் ஆனால் அவர்கள் தங்கள் மக்களிற்காக எதனையும் பெறுகின்றனர் இல்லை என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இரண்டு வருடத்திற்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளகூடிய தீர்வை தமிழ்மக்களிற்கு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.