3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க – தி.மு.க. நேரடி மோதல்

293 0

201610230808151882_3-constituency-election-aiadmk-dmk-direct-conflict_secvpfதஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில், அ.தி.மு.க-தி.மு.க. நேரடி மோதலில் ஈடுபடுகின்றன.தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில், அ.தி.மு.க-தி.மு.க. நேரடி மோதலில் ஈடுபடுகின்றன. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க.வும் களத்தில் இறங்குவதால் 5 முனைப்போட்டி நிலவுகிறது.

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளின் தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டதால் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சீனிவேல் வெற்றி பெற்றார். ஆனால், உடல்நல குறைவு காரணமாக வாக்கு எண்ணும் நாளுக்கு முன்பாகவே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அதே மாதம் 25-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால், திருப்பரங்குன்றம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

எனவே, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் 6 மாதங்களில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், இந்த 3 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க-தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ரெங்கசாமியும், தி.மு.க. சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமியும் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.போஸ்சும், தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணனும் மோதுகின்றனர்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பாக, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளிலும் யாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததோ, அவர்களுக்கே தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த எம்.மணிமாறனுக்கு பதிலாக தற்போது டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார்.

மேலும், இந்த 3 தொகுதிகளிலும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் தனியாக களம் இறங்குகின்றன. இதனால், 5 முனைப்போட்டி உருவாகி இருக்கிறது.

மக்கள்நலக் கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், 3 தொகுதிகளின் தேர்தலை தங்கள் கூட்டணி புறக்கணிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று அறிவித்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில், அரவக்குறிச்சி தொகுதி இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது 3 தொகுதிகளிலும் பா.ஜ.க.வே போட்டியிட இருக்கிறது. அந்த கட்சியில் வேட்பாளர் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது.

சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அரவக்குறிச்சியில் ம.பாஸ்கரனும், தஞ்சாவூரில் ஜி.குஞ்சிதபாதமும் போட்டியிட்டனர். இந்த முறையும் அவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வேட்பாளர் மாற்றப்பட உள்ளார். அதற்கான தேர்வு நடந்து வருகிறது.

சட்டசபை தேர்தலின் போது, மக்கள்நலக் கூட்டணியுடன் இணைந்து தே.மு.தி.க. போட்டியிட்டது. அந்த கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கும், தஞ்சாவூர் தொகுதி தே.மு.தி.க.வுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது 3 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட இருக்கிறது. வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.