எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தி.மு.க. தான்- மு.க.ஸ்டாலின்

300 0

201610230840406415_mk-stalin-says-opposition-party-dmk-is-ruling-party_secvpfஆளுங்கட்சி செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது என்றும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தி.மு.க. தான் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்கபெருமாள் கோவில் அருகே பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. விழா அரங்கம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. திரிசூலத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில், பரனூர் மேம்பாலம் வரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவேற்று வரவேற்பு பதாகைகள், கட்சி கொடிகள், தோரணங்கள், அலங்கார கட் அவுட்டுகள் கட்டப்பட்டு இருந்தது.

இந்த விழாவிற்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. பொருளாளரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது முன்னிலையில் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க.வில் இணைந்த அவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்று, வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைக்கு பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 12 ஆயிரத்து 587 பேர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இதில் அ.தி.மு.க.வில் இருந்து மட்டும் 4 ஆயிரத்து 907 பேரும், தே.மு.தி.க.வில் இருந்து 4 ஆயிரத்து 327 பேரும் இணைந்து இருக்கிறார்கள். அண்மையில் கூட அ.தி.மு.க. சார்பில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். அந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு எவ்வளவு மக்கள் நெருக்கடி இருந்தாலும் 7 ஆயிரத்துக்கு மேல் உட்கார வைக்க முடியாது. அதில் ஒரு லட்சம் பேர் வந்தார்கள் என்று சொல்கிறார்கள். அதுபோன்ற நிகழ்வு இதுவல்ல.

ஆனால் இங்கு இணைந்தவர்கள் அனைவரும் தங்கள் படிவத்தில் கையெழுத்திட்டுள்ளனர். தி.மு.க.வில் இணைந்த உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். உங்களையெல்லாம் பார்க்கும் போது, இது தி.மு.க.வில் இணையும் விழாவா? தி.மு.க. மாநாடா? என்று சொல்லும் அளவுக்கு திரண்டு இருக்கிறீர்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? நாம் ஆட்சி பொறுப்பில் இல்லை என்ற போதிலும், எதிர்கட்சியாக இருந்தும் தமிழகத்தை ஆள்வது தி.மு.க. தான். இதில் மாற்று கருத்து இல்லை. இன்றைக்கு ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது. 25-ந்தேதி அனைத்து கட்சிக்கூட்டத்தை நாம் கூட்ட இருக்கிறோம்.

தமிழகத்தில் நடப்பது செயல்படாத ஆட்சி. தேர்தலில் நாம் தோற்றாலும், ஆட்சி பொறுப்புக்கு வரமுடியாத அளவுக்கு எம்.எல்.ஏ.க்களை பெற முடியாவிட்டாலும் இன்றைக்கு பிரதான எதிர்கட்சியாக அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து இருக்கிறோம். தமிழகம் எத்தனையோ தேர்தல் களத்தை சந்தித்து இருக்கிறது.

நான் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறேன். தினமும் ஏராளமானோர் தி.மு.க.வில் இணைகிறார்கள். நவம்பர் 9-ந்தேதி கோவை செல்கிறேன். அங்கு 10 ஆயிரம் பேர் இணைய இருப்பதாக எனக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுகிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? அந்த கட்சியின் செயல்பாடு பிடிக்காமல் இருக்கலாம்.

அந்த கட்சியால் மக்களுக்கும், தனக்கும் நன்மை ஏற்படாது என்று எண்ணி இருக்கலாம். இதுபோன்று பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சிக்கு போக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆளுங்கட்சியை தான் தேர்ந்தெடுப்பார்கள். ஏனென்றால் அங்கு தான் அதிகாரமும், செல்வாக்கும் இருக்கும். ஆனால் எதிர்கட்சியான தி.மு.க.வை தேடி வருகிறார்களே ஏன்? என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி 93 வயதிலும் மக்களுக்காக பாடுபடுவதே இதற்கு காரணம். மக்களை பற்றி சிந்திக்கிற இயக்கம் தி.மு.க. என்பது தான். இன்றைக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் அனாதையாக திரிகிறார்கள். சிலர் முதல்-அமைச்சர் கனவில் மிதக்கிறார்கள். தி.மு.க. தொடங்கிய காலத்தில் உடனடியாக தேர்தல் களத்தை சந்திக்கவில்லை.

1957-ல் தான் தேர்தல் களத்தை சந்தித்தது. படிப்படியாக மக்களின் மதிப்பை பெற்று ஆட்சியையும் பிடித்தது. இடைப்பட்ட காலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் கடந்த 5 ஆண்டில் நாம் ஆட்சியில் இல்லை. 2016-ல் நடந்த தேர்தலில் நாம் ஆட்சியில் இல்லை. இன்னும் 5 ஆண்டுகளிலோ அல்லது அதற்கு முன்போ தெரியவில்லை, நாம் ஆட்சிக்கு வருவோம்.

இன்றைக்கு விவசாயிகள் தற்கொலை செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். நம்மை சுற்றி பாலாறு, முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினை இருக்கிறது. தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் போர் ஏற்படும் அளவுக்கு பிரச்சினை உருவாகி இருக்கிறது. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது காவிரி பிரச்சினை பூதாகரமாக இருந்தது இல்லை.

அண்டை மாநில முதல்-மந்திரிகளுடன் நல்ல நட்பு வைத்திருந்தார். ஓரளவுக்கு நமக்கு தண்ணீரும் கிடைத்தது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டும், சட்டப்படி நடவடிக்கையும் எடுத்தார். அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டினார். ஆனால் இன்றைக்கு எத்தனை முறை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருப்பார்கள் என்பதை எண்ணி பாருங்கள்.

கருணாநிதியின் அறிவுறுத்தலின் பேரில், என் தலைமையில் அனைத்து கட்சி கூட்டுவது குறித்து அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். 25-ந்தேதி நடக்கும் கூட்டத்துக்கு அவர்கள் வரவேண்டும். ஏனென்றால் கட்சி என்பது வேறு. அரசியல் என்பது வேறு. நமக்கு தேவை தமிழக மக்கள், விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான். எனவே இந்த கூட்டத்தின் வாயிலாக அனைத்து கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோளாக விடுக்கிறேன். நீங்கள் அனைவரும் (அனைத்து கட்சிகள்) வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வீரவாள் பரிசளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ரித்தீஷ், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் ராஜன், ஒரகடம் சிலம்பு செல்வன், ஒன்றிய பிரதிநிதி ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், பெருங்களத்தூர் பேரூராட்சி தலைவர் எஸ்.சேகர், பீர்க்கன்கரணை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எஸ்.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.