ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொட்டிகளை தீயிட்டு எரித்தால் 500-க்கும் அதிகமான கிராம மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இருவர் பலியாகியுள்ளனர்.
ஈராக் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மோசூலை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி வைத்துள்ளனர். இந்த நகரத்தை மீட்பதற்காக ஈராக் படைகள் உச்சகட்ட தாக்குதல் நடத்திவரும் நிலையில் அருகாமையில் உள்ள கய்யாரா நகருக்குள் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள கந்தக தொழிற்சாலைமீது குண்டுகளைவீசி தாக்கினர்.
இந்த தாக்குதலால் அங்கு கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டிருந்த மேல்நிலை தொட்டிகள் தீபற்றி எரிந்தன. இதனால் ஏற்பட்ட புகை மண்டலம் அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு பரவியதால் அங்கு வசித்துவரும் 500-க்கும் அதிகமான மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவருக்கும் கய்யாரா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்ததாக ஈராக் நாட்டின் ராணுவ ஜெனரல் குசே ஹமித் காதெம் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகள் மீதும் தீவிரவாதிகள் குண்டுகளைவீசி தாக்குதல் நடத்தியதால் இன்றுகாலை நிலவரப்படி இப்பகுதியையொட்டி பல கிலோமீட்டர் தூரத்துக்கு நச்சு புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.