இலங்கையில் சிறுபான்மை மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று ஏனையவர்கள் போல நாங்களும் வாழ வேண்டுமாக இருந்தால் சிறுபான்மை மக்களின் உள்ளூராட்சி மன்றம், மாகாண சபை மற்றும் பாராளுமன்றம் ஆகிய தேர்தல்களின் தமிழ் பிரதிநிதிகளின் அங்கத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனால் அதனை பாதுகாக்க அணைவரும் முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியா ஒலிபென்ட் தோட்டத்தில் மக்களுக்கு பல காலமாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் குடிநீர் பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதனை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் நேற்று (09) மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று எமது நாட்டில் சிறுபான்மை மக்கள் தங்களுடைய வாக்கு பலத்தால் எங்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ததன் காரணமாக நாங்கள் அவர்களுக்கான அபிவிருத்தியை கொண்டு வர முடிந்துள்ளது.
எனவே எதிர்காலத்திலும் எங்களுடைய சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கபடுமானால் எங்களுடைய அபிவிருத்தி, எங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பது இலகுவாக அமையும்.
சிறுபான்மை மக்களை பொருத்தவரையில் எமக்குள்ளே பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், ஒரு தேர்தல் என்று வருகின்ற பொழுது நாங்கள் சிந்தித்து கட்டுக்கோப்புடன் எங்களுடைய ஒற்றுமையயை நிரூபிக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களை பொருத்த வரையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எங்களுடைய பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் செயல்பட வேண்டும்.
அது வடக்கு கிழக்காக இருந்தால் என்ன, மலையகமாக இருந்தால் என்ன, சப்ரகமுவாக இருந்தால் என்ன அனைத்து சிறுபான்மை மக்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
அப்படி செயல்பட்டால் எங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் வருகின்ற அரசாங்கங்களிடமும், ஜனாதிபதிடமும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
பிரதிநிதித்துவம் குறைவடையும் பட்சத்தில் எங்களுடைய அபிவிருத்தி பாதக்கப்படும். அதேபோல பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டியது வரும். சிறு சிறு விடயங்களு்ககு கூட போராட்டங்கள் நடத்த வேண்டியது வரும்.
இன்று பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் எங்களுடைய தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 50 ரூபாவை பல காரணங்களை காட்டி தடுத்துக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் குறித்த அமைச்சரின் அமைச்சின் ஊடாக பல்வேறு விடயங்களுக்கு பணம் செலவிடப்படுகின்றது. ஆனால் ஏன் எங்களுடைய மக்களுக்கு 50 ரூபாவை வழங்க முடியாது.
எனவே எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும், அனைத்து சிறுபான்மை மக்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையான ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.