முத்துப்பேட்டையில் கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் ஒரு விவசாயி தனது சேதமடைந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றி நூதன போரட்டத்தை நடத்தி வருகிறார்.டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் கோர தாண்டவமாடியது. இதனால் ஏராளமான மக்கள் தங்களது வீடுகள், தென்னை மரங்கள் ஆகியவை இழந்து தங்களது வாழ்வாதாரங்கள் இல்லாமல் இன்னும் பரிதவித்து வருகின்றனர்.
இதில் வீடுகளை இழந்தவர்கள் மற்றும் தென்னை விவசாயிகள் பலருக்கும் இன்று வரை நிவாரணம் வழங்கப்படவில்லை.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் புயல் நிவாரணம் கிடைக்காமல் உள்ளனர். அதனால் அடிக்கடி தென்னை விவசாயிகளும், கிராம மக்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தென்னை நிவாரணம் வாங்கிய பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னை நிவாரணம் வாங்கிய விவசாயிகளின் பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டது.
இதனைக்கண்ட உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் பெயரிலும் நிவாரணம் பெற்றதாக பட்டியலில் வெளி வந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மூலம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பல கோடி மோசடி நடந்துள்ளது அம்பலமாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் ஒரு விவசாயி தனது வீட்டை நினைவு இல்லமாக மாற்றி நூதன போராட்டத்தை நடத்தி வருகிறார்.
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் அழகிரிசாமி(வயது71). இவருக்கு சாந்தா என்ற மனைவியும், மூன்று மகன்கள் ஒரு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. விவசாயியான இவர் பாசனதாரர்கள் சங்க செயலாளராகவும் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில் இவரது ஓட்டு வீடு முற்றிலும் சேதமானது. ஆனால் அழகிரிசாமிக்கு புயலில் வீடு சேதமானததற்கும் விழுந்த தென்னை மரங்களுக்கும் நிவாரணம் இதுநாள்வரை வந்து சேரவில்லை.
இதுகுறித்து தனக்கும் இதுபோன்ற விட்டுப்போன மற்றவர்களுக்கும் நிவாரணம் தரக்கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்தார். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை நிவாரணமும் கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த அழகிரிசாமி நிவாரணம் கொடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் ‘கஜா புயல் நினைவு வீடு’ என்று பேனர் வைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயி அழகிரிசாமி கூறும்போது, ‘‘கஜா புயல் நிவாரணம் கேட்டு அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தேன். எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் மனவேதனையில் எனது வீட்டை சீரமைக்காமல் அதிகாரிகளை கண்டித்தும் உடன் நிவாரணம் வழங்ககோரியும் ‘கஜா புயல் நினைவு வீடு’ என்று பேனர் வைத்துள்ளேன்’’ என்றார்.