புனித ஹஜ் யாத்திரை தொடங்கியது – மெக்கா நகரில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் திரண்டனர்

317 0

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் புனித யாத்திரை இன்று தொடங்கியது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் திரண்டுள்ளனர்.இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில் தொடங்கி ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பயணிகள் முஹம்மது நபியின் பிறந்த ஊரான மக்கா, மற்றும் அவரது நினைவிடம் அமைந்துள்ள மதினா நகரங்களுக்கு புனித யாத்திரை செல்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் இங்கு குவிந்துள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.  இவர்களுடன் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருலட்சம் பேரும் பங்கேற்கிறார்கள்.
மெக்காவில் திரண்ட முஸ்லிம்கள்

 

மக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றிய யாத்ரீகர்கள்,  மினா நகருக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அரபா மலையில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பர்.
மினா நகரை நோக்கி..

 

இறைவனின் கட்டளையை ஏற்று இறைத்தூதரான இபுறாஹிம் நபி, தனது ஒரே மகனான இஸ்மாயீலை பலியிட சித்தமான வரலாற்றை நினைவுகூரும் அரபாத் மலையை வலம்வந்த பின்னர், முசதல்பியா என்ற வெட்டவெளியில் கூழாங்கற்களை சேகரித்து, ஜம்ராத் என்ற இடத்தில் தீயமன ஆசைகளான சாத்தான் மீது கல்லெறியும் சம்பிரதாயத்தை யாத்ரீகர்கள் நிறைவேற்றுவார்கள்.
சாத்தான் மீது கல்லெறிதல்

பின்னர், தங்களது விருப்பம்போல் ஆடு மற்றும் ஒட்டகங்களை ‘குர்பானி’ (இறைவனின் பெயரால் புனிதப் பலி) செய்துவிட்டு, தங்களது பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவர்களாக – அன்று பிறந்த குழந்தையைப் போல் ‘ஹாஜி’ என்ற பட்டத்துடன் தங்களது இல்லங்களுக்கு புறப்பட்டுச் செல்வர்.